நோயாளியின் தந்தையை வெளியே தள்ளிய ஜி.ஹெச்., காவலாளிகள்
வேலுார்:வேலுார் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனையில்,நோயாளியை பார்க்க வந்த தந்தையை வெளியே தள்ளி, அரசு மருத்துவமனை செக்யூரிட்டிகள் தகராறில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த, மேல்கல்பூண்டியை சேர்ந்தவர் சதீஷ்குமார், 38. இவரது மகன் அருணாச்சலம், 9. வைரஸ் காய்ச்சலால் காரணமாக நேற்று முன்தினம் சிறுவன், வேலுார் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது, சிறுவனுக்கு சிறுநீர் அளவிடும் மக் மற்றும் குடிநீர் வாங்கி வருமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். தொடர்ந்து, பொருட்களை வாங்கி கொண்டு, மாலை, 4:00 மணி முதல், 5:00 மணி வரையிலான பார்வையாளர் நேரத்தில், சதீஷ்குமார் மருத்துவமனைக்கு உள்ளே சென்றார்.
அப்போது, லிப்டில் அதிக கூட்டம் இருந்ததால், அவர் படிக்கட்டில் ஏறி, 3வது தளத்திற்கு சென்றுள்ளார். அப்போது, மருத்துவமனை செக்யூரிட்டிகள் அவரை தரதரவென வெளியே தள்ளியதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்கில் பரவி, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பொதுமக்கள் கூறுகையி, 'மருத்துவமனையில், ஏழு தளங்களிலும் முறையான குடிநீர் வசதி இல்லை. பார்வையாளர் நேரத்தில் கூட உறவினர்களை உள்ளே அனுமதிப்பதில்லை. இங்கு இப்படி தான் இருக்கும், வேண்டுமெனில் தனியார் மருத்துவமனையில் சேர்த்து கொள்ளுங்கள் எனவும், கண்ணியகுறைவாகவும், மருத்துவமனை செக்யூரிட்டிகள் பேசுகின்றனர்.
மருத்துவமனை நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
இதுகுறித்து, விளக்கம் கேட்க அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை டீன் ரோகிணி தேவியை அழைத்த போது, அவர் அழைப்பை ஏற்கவில்லை.
அத்தனை கயவர்களையும் பணி நீக்கம் செய்ய வேண்டும் அரசாங்கம் காதில் வாங்குமா