வீட்டின் கூரை மீது காரை 'பார்க்' செய்த குடும்பம்; ஆனந்த் மஹிந்திரா கவலை
புதுடில்லி: பீஹாரில் வீட்டின் கூரை மீது காரை நிறுத்தியதை அறிந்து கவலை அடைந்த மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த், 'யாரும் இதுபோன்ற செயலில் ஈடுபட வேண்டாம்' என்று கேட்டுக்கொண்டார்.
பீஹாரின் கோபால்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த மனோஜ் யாதவ், அண்மையில் மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ காரை புதிதாக வாங்கியுள்ளார். இந்த சூழலில், அவருக்கு இஸ்ரேலில் வேலை கிடைத்து சென்று விட்டார். இதனால், அவரது குடும்பத்தினர், பாதுகாப்பு கருதி, கிரேன் இயந்திரத்தின் உதவியுடன் காரை வீட்டின் 2வது மாடியில் நிறுத்தினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், பலரின் கவனத்தையும் ஈர்த்தது.
இந்த வீடியோவுக்கு சாதகமாகவும், எதிராகவும் கமென்ட்ஸ்கள் வந்தன. இந்த நிலையில், பீஹாரைச் சேர்ந்த நபரின் இந்த செயல் குறித்து மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த், தனது சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில்; ஸ்கார்பியோ கார் எந்த இடத்திலும் ஏறி விடும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், இதை அவர்கள் இப்படி நேரடியான அர்த்தத்தில் எடுத்துக் கொள்வார்கள் என்று நான் கொஞ்சமும் நினைக்கவில்லை. கார் மீதான அன்புக்கு முழு மதிப்பெண் கொடுக்கலாம். ஆனால், அவர்கள் வீட்டின் கூரை காரின் எடையை தாங்கும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளதா? என்பது தான் என்னுடைய கவலையாக உள்ளது. இந்தச் செயலை யாரும் வீட்டில் முயற்சிக்க வேண்டாம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.