ஆனைமலையாறு - நல்லாறு திட்டம்: நிறைவேற பிரத்யங்கராதேவி நிகும்பல மஹாயாக வழிபாடு

பொங்கலுார்:ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் நிறைவேறினால் தான் பி.ஏ.பி., திட்டம் முழுமை பெறும். விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான இத்திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. பல அரசுகள் மாறியும் விவசாயிகளின் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை.

தற்போது த.வெ.க. தலைவர் விஜய் தலைமையிலான புதிய அரசு அமைந்துள்ள நிலையில் விவசாயிகள் தங்கள் கோரிக்கை நிறைவேறும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். இத்திட்டத்தை நிறைவேற்ற கோருவது குறித்த ஆலோசனைக் கூட்டம் பொங்கலுாரிலுள்ள பிரபஞ்ச பீட ஆசிரமத்தில் பிரபஞ்சானந்த தெய்வ சிகாமணி சுவாமிகள் தலைமையில் நடந்தது.

ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும், ஊர் தோறும் பிரார்த்தனை கூட்டம் நடத்துவது, இதில் விவசாயிகள், பாசன சபை தலைவர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த வழிபாட்டில், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சண்முகம், துணை தலைவர் சண்முகசுந்தரம், மாநில ஒருங்கிணைப்பாளர் மயில்சாமி, அவைத்தலைவர் பாலசுப்ரமணி, காங்கேயம் வட்டார தலைவர் ஈஸ்வரமூர்த்தி, பாசன சபை தலைவர் முத்துசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி நிறைவாக பிரத்யங்கராதேவி நிகும்பல மஹாயாகம் நடந்தது. விவசாயிகள் மற்றும் சங்க நிர்வாகிகள் யாகத்தில் பங்கேற்று திட்டம் நிறைவேற பிரார்த்தனை செய்தனர்.

Advertisement