கிடப்பில் போடப்பட்ட சம வட்ட குழிகள் அமைக்கும் பணி: மீண்டும் துவக்க கோரிக்கை

கம்பம்: மேகமலை புலிகள் காப்பக பகுதிகளில் அயல் களை செடிகளை அகற்றும் பணி, மழைநீரை சேமிக்க சமவட்ட குழிகள் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

ஸ்ரீவி., மேகமலை புலிகள் காப்பகத்தில் கூடலூர், கம்பம் கிழக்கு, சின்னமனூர், மேகமலை உள்ளிட்ட சில வன சரகங்களில் அயல் களை செடிகளை அகற்றும் பணி, மழைநீரை சேமிக்க சமவட்ட குழிகள் வெட்டும் பணி சில ஆண்டுகளுக்கு முன் மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு சரகத்திலும் தலா 375 ஏக்கர் பரப்பில் இந்த பணிகள் நடந்தது.

குழிகளில் மழை காலத்தில் சேகரமாகும் மழை நீர் வன உயிரினங்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்தது. மேலும் வனப்பகுதி பசுமையாக இருக்க உதவியது.புலிகள் காப்பக பகுதிகள் மட்டுமல்லாமல், ரோட்டிற்கு மேற்கு பக்கம் உள்ள காப்பு காடுகளிலும் சமவட்ட குழிகள் வெட்டி மழை நீரை சேமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வனத்துறையினர் கூறுகையில், ஒவ்வொரு சரகத்திலும் ஒரு ஏக்கரில் 20 குழிகள் வீதம் 125 ஏக்கரில் 2500 குழிகள் வெட்டப்பட்டது. அயல் களை செடிகள் அகற்றும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. மேகமலை பகுதியில் குறிப்பிட்ட சில பகுதியில் இந்த குழிகள் வெட்டப்பட்டது. சில ஆண்டுகளாக இந்த பணிகள் மேற்கொள்ளவில்லை என்றார்.

Advertisement