சொத்துக்களை பறித்துக்கொண்டு கவனிக்க மறுப்பதாக முதியவர் மனு

கோவை: கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், அடிப்படை பிரச்னைகளை சரிசெய்ய கோரி மனுக்கள் பெறப்பட்டன.

பனைமரத்துார் பகுதி நுழைவாயிலில், ஊருக்குள் இறங்கும் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் தனியார் வாகனங்கள் நிறுத்தப்பட்டு ஆக்கிரமிக்கப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டது. அங்கு சமூகநலக்கூடம், நுாலகம், பூங்கா உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதியினர் மனு அளித்தனர்.

மணியகாரன்பாளையம், கக்கன் வீதியில் குழாய் உடைந்து குடிநீர் வீணாக ரோட்டில் செல்வதாகவும், அதே பகுதியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பழுதடைந்துள்ள கழிப்பறையை அகற்றி, புதிய கழிப்பறை கட்டித்தர வேண்டும் எனவும், கோரிக்கை விடுக்கப்பட்டது.

இடையர்பாளையம், டி.வி.எஸ். நகரில் மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும், செல்வபுரம், பொன்னையராஜபுரம், பெரியகடை வீதி, 5 கார்னர், டவுன்ஹாலில் மாநகராட்சி திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்ட ரோடுகள் முறையாக மூடப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளதை சரிசெய்ய வேண்டும் என, இந்து மக்கள் கட்சியினர் மனு அளித்தனர்.

சொத்துகளை அபகரித்துக் கொண்டு பிள்ளைகள் கவனிக்க மறுப்பதாக, வெள்ளலூரை சேர்ந்த 90 வயதான முதியவர் ராமசாமி மனு அளித்தார்.

செப்., மாத முதியோர் உதவித்தொகை கிடைக்கவில்லை என முதியவர்கள் சிலர் மனு அளித்தனர். மொத்தம் 560 மனுக்கள் பெறப்பட்டன.

Advertisement