வீரமணி மீதான வழக்கில் அனைத்து கோணங்களிலும் விசாரணை: ஐகோர்ட்டில் போலீசார் தகவல்

சென்னை: 'கிரானைட் வீரமணிக்கு எதிரான, பாலியல் வன்கொடுமை புகார்கள் தொடர்பான விசாரணையை மறைக்க முயன்றதாக எழுந்த குற்றச்சாட்டுகளை, சிறப்பு புலனாய்வு குழு அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருகிறது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது.

கிரானைட் வீரமணி தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன், விசாரணைக்கு வந்தது.

அப்போது, காவல்துறை தரப்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அருண் அன்புமணி வாதாடியதாவது: பாலியல் வன்கொடுமை புகார்கள் தொடர்பான விசாரணையை, மறைக்க முயன்றதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து, சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. பாதிக்கப்பட்ட பலர் புகார் அளித்து வருகின்றனர். அனைத்து கோணங்களிலும் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்கை வெளியுலகிற்கு கொண்டு வந்த பெருமை, போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதியையே சேரும். அவர் மட்டும் மேல் விசாரணைக்கு உத்தரவிடாவிட்டால், இந்த விவகாரம் குழிதோண்டி புதைக்கப்பட்டிருக்கும்.

இதுவரை சிறப்பு புலனாய்வுக் குழு, நான்கு முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்துள்ளது. பாதிக்கப்பட்ட மேலும் மூவர் புகார் அளித்துள்ளனர். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தாமாக முன்வந்து, புகார் அளிக்க வேண்டும் என, காவல்துறை விரும்புகிறது. இந்த வழக்கு தொடர்பாக, ஊடகங்கள், கூடுதல் கவனத்துடன் செய்திகளை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் வாதாடினார்.

நீதிபதி வழக்கு விசாரணையை தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

Advertisement