கூண்டில் சிக்கியது சிறுத்தை கண்ணாமூச்சி மக்கள் நிம்மதி

மேட்டூர்: சேலம் மாவட்டம், கொளத்துார், கண்ணாமூச்சி ஊராட்சி, பாலமலை அடிவாரத்தில் உள்ளது. மேட்டூர் வனச்சரகம் ராமன்பட்டி பீட்டில் உள்ள கண்ணாமூச்சி காப்புக்காடு, ஈரோடு மாவட்டம், சென்னம்பட்டி வனச்சரக எல்லையில் உள்ளது.

கண்ணாமூச்சி அருகே உள்ள கரடு பகுதியில், இரு மாதங்களாக, ஒரு சிறுத்தை சுற்றித்திரிந்தது. மலையடிவார கிராம விவசாயிகள் வளர்க்கும் ஆடு, மாடு, கோழிகள், நாய்களை வேட்டையாடின. இதனால், மக்கள் இரவில் வெளியே நடமாடவே அச்சப்பட்டனர்.

இரு வாரங்களுக்கு முன், மேட்டூர் சரக வனத்துறையினர், கண்ணாமூச்சி ஊராட்சியில் மூலக்கடை, நெடுஞ்செழியன் நகர், நஞ்சுண்டாபுரம், மிளகாய் பொதை, மசகவுண்டனுார் ஆகிய இடங்களில் கூண்டுகளை வைத்தனர். தினமும் ரோந்து சென்று, கூண்டில் சிறுத்தை சிக்கியுள்ளதா என கண்காணித்தனர்.

அதன்படி நேற்று அதிகாலை கண்காணித்தபோது, மிளகாய்பொதையில் வைத்திருந்த கூண்டில், 10 வயது மதிக்கத்தக்க, ஒரு சிறுத்தை சிக்கியிருந்தது. உடனே சேலம் மாவட்ட வன அலுவலர் அம்புல்கர் யஷ்வந்த் ஜகதீஷ் தலைமையில் மேட்டூர், சென்னம்பட்டி வனச்சரகர்கள் செங்கோட்டையன், ராஜ்குமார் உள்ளிட்ட வன ஊழியர்கள், மேட்டூர் தாசில்தார் செந்தில்குமார், கொளத்துார் போலீசார், அங்கு சென்றனர்.

சிக்கிய சிறுத்தை ஆக்ரோஷமாக இருந்ததால், கூண்டை சுற்றி பாலிதீன் கவர் போட்டு மூடினர். அதன்பின், மினி லாரியில் ஏற்றப்பட்டு, மக்கள் இல்லாத பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுத்தைக்கு தாகம் தீர்த்து, அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.

வனத்துறையினர், ஒரு மாத கண்காணிப்புக்கு பின், சிறுத்தை சிக்கியதால் கண்ணாமூச்சி மக்கள் நிம்மதி அடைந்தனர்.

Advertisement