ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் 2வது நாள் காத்திருப்பு போராட்டம்

ஆத்துார்:ஆத்துாரில், ஒப்பந்த துாய்மை பணியாளர்கள், நெற்றியில் நாமம் போட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆத்துார் நகராட்சி அலுவலகம் முன், சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில் நேற்று, இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஒப்பந்த துாய்மை பணியாளர்கள், பணி நிரந்தரம், ஊதிய உயர்வு போன்றவை வழங்கவில்லை என கூறி, தங்களது நெற்றியில் நாமம் போட்டபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படாததால் மதியம், 1:00 மணிக்கு மேல் ஒப்பந்த துாய்மை பணியாளர்கள், பாத்திரம், காய்கறிகள் எடுத்து வந்து, விறகு அடுப்பு வைத்து சமையல் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

நகராட்சி கமிஷனர் (பொ) சபாநாயகம், போராட்டம் நடத்தி வரும் ஒப்பந்த துாய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், 'பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகள், தமிழக அரசு தான் முடிவெடுக்க வேண்டும். போராட்டம் குறித்து, அரசுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது' என்றார். ஒப்பந்த பணியாளர்கள், 'எங்களது கோரிக்கைக்கு தீர்வு காணும் வரை தொடர் போராட்டம் நடத்தப்படும்' என, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement