சேலம் மாவட்டத்தை ஏற்றுமதி மையமாக உருவாக்க நடவடிக்கை

சேலம்:சேலம் மாவட்டத்தை, ஏற்றுமதி மையமாக உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக வால்மார்ட் திறன் மேம்பாடு நிகழ்ச்சி, சேலத்தில் நேற்று நடந்தது.

கலெக்டர் இளம்பகவத் தலைமை வகித்து பேசியதாவது: தமிழகத்தில், ஏற்றுமதி மையமாக உருவாக்கப்படும், 10 மாவட்டங்களில், சேலமும் ஒன்று. மாவட்டத்தில், 2025-26ல், ஏற்றுமதி தரவுகள்படி, 120 வகையான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. மொத்த ஏற்றுமதி மதிப்பு, 2,654 கோடி ரூபாய். 2026ன், முதல் காலாண்டில் மாவட்டத்தில் இருந்து, 687 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி நடந்துள்ளது. அதில் இரும்பு, எக்கு, கிரானைட், பருத்தி துணி, ஆயத்த ஆடைகள், காபி, தென்னை நார் மற்றும் நார் பொருட்கள், மசாலா பொருட்கள், ரசாயன பொருட்கள், பொறியியல் பொருட்கள் ஆகியன முக்கிய பொருட்களாக ஏற்றுமதி
செய்யப்பட்டுள்ளன.
சேலம் ஜவ்வரிசி, துணி நுால், வெண்பட்டு ஆகியவற்றுக்கு ஜி.ஐ., அங்கீகாரம் உள்ளதால், இந்த பொருட்களை சர்வதேச சந்தைகளுக்கு எடுத்து செல்ல அதிக வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே, மாவட்டத்தில், 1,986 ஏற்றுமதியாளர்கள் இருப்பதால், அவர்களின் ஏற்றுமதி திறனை மேலும் வலுப்படுத்துவதுடன், புதிய எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களையும் ஏற்றுமதி துறைக்குள் கொண்டு வருவதே நமது நோக்கம்.
அதனால், உணவு பதப்படுத்தும் பொருட்கள், கைத்தறி மற்றும் ஜவுளி பொருட்கள், பொறியியல் பொருட்கள், வேளாண் மற்றும் தோட்டக்கலை பொருட்கள், தம்மம்பட்டி மரச்சிற்பங்கள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு அதிகம் கிடைக்கும். மாவட்டத்தின் சிறந்த தயாரிப்புகளை உலக சந்தைக்கு எடுத்து சென்று, வலுவான ஏற்றுமதி மையமாக, சேலம் மாவட்டத்தை உருவாக்குவதை முக்கிய நோக்கமாக கொண்டு செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement