டோல்கேட் அமைத்து கண்டபடி கட்டணம் வசூலிப்பதா?உயர்நீதிமன்றம் அதிருப்தி

1

மதுரை: துாத்துக்குடி - திருநெல்வேலி நான்குவழிச் சாலை வல்லநாட்டில் தாமிரபணி ஆற்றை கடக்கும் பாலத்தில் ஓட்டை ஏற்பட்டுள்ளதை சரி செய்ய தாக்கலான வழக்கில், டோல்கேட் அமைத்து கண்டபடி கட்டணம் வசூலிப்பது குறித்து அதிருப்தி வெளியிட்ட உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, பாலத்தை சீரமைக்க மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு (என்.எச்.ஏ.ஐ.,)க்கு அறிவுறுத்தியது.

திருநெல்வேலி வழக்கறிஞர் சிதம்பரம் 2021ல் தாக்கல் செய்த பொதுநல மனு:

துாத்துக்குடி- திருநெல்வேலி நான்குவழிச்சாலை தாமிரபரணி ஆற்றை கடந்து செல்கிறது. வல்லநாட்டில் ஆற்றின் குறுக்கே இரு பாலங்கள் அமைக்கப்பட்டன. இவை 2012ல் பயன்பாட்டிற்கு துவக்கப்பட்டது. அப்போது தேசிய நெடுஞ்சாலை ஆணைய (என்.எச்.ஏ.ஐ.,) அதிகாரிகள், 'வெள்ளப் பெருக்கு மற்றும் கனரக வாகனங்களால் பாலத்திற்கு பாதிப்பு ஏற்படாது. பாலத்தின் உறுதித் தன்மைக்கு 100 ஆண்டுகள் உத்தரவாதம் அளிக்கிறோம்,' என்றனர்.

ஒரு பாலத்தில் 2017ல் விரிசல் ஏற்பட்டது. அதை கண்துடைப்பிற்காக சரி செய்தனர். பாலம் வலுவிழந்து தொங்கிய நிலையில் உள்ளது. எந்த நேரத்திலும் இடிந்து விழ வாய்ப்புள்ளது. 2020 மார்ச்சில் மற்றொரு பாலத்திலும் ஓட்டை விழுந்தது. மற்றொரு பாலம் வழியாக போக்குவரத்து நடக்கிறது. இதன் வழியாக துாத்துக்குடி துறைமுகத்திற்கு கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. ஒப்பந்தகாரர்கள் செய்த தவறால் பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இரு பாலத்திற்கும் இடையே 70 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பாலம் உறுதித்தன்மையுடன் உள்ளது.

வல்லநாட்டில் துாத்துக்குடி - திருநெல்வேலி நான்குவழிச் சாலை பாலத்தை சீரமைக்க வேண்டும். ஒப்பந்தகாரர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

திருநெல்வேலி பெர்டின் ராயன், துாத்துக்குடி-திருநெல்வேலி நான்குவழிச்சாலை முறப்பநாடு தாமிரபரணி ஆற்றின் குறுக்கே பாலம் உள்ளது. முறப்பநாடு பாலத்தை சீரமைக்கும் வரை துாத்துக்குடி வாகைக்குளம் டோல்கேட்டில் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும்' என, 2023ல் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

நீதிபதிகள் பி. வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு, ‛தேசிய நெடுஞ்சாலையில் பாலங்கள், சாலைகள் பழுதடைவது தொடர்கிறது. டோல்கேட் அமைத்து கண்டபடி கட்டணம் வசூலிப்பதை யாரும் கேட்க முடியாது என்ற எண்ணத்தில் என்.எச்.ஏ.ஐ., நிர்வாகம் செயல்படுகிறதா' என அதிருப்தி வெளியிட்டனர்.

பாலம் சீரமைக்க மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தி அக்.,26க்கு ஒத்திவைத்தனர்.

Advertisement