கிரானைட் வீரமணி மற்றொரு வழக்கில் மீண்டும் கைது; மேலும் ஒரு சிறுமி சிறப்பு புலனாய்வு குழுவிடம் புகார்
சென்னை: சிறுமியரை பாலியல் வன்முறை செய்த வழக்கில் கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டுள்ள, கிரானைட் வீரமணி, 85, மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமியரை பாலியல் வன்முறை செய்தததாகவும், தற்கொலைக்கு துாண்டியதாகவும், கிரானைட் வீரமணி மீது, 15க்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக, சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே, சிறுமியரை பாலியல் வன்முறை செய்ததாக, போக்சோ வழக்கில், அவர் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இன்று, மற்றொரு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். இன்னும் மூன்று வழக்குகளில், கைது செய்யப்பட உள்ளார் என, போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே, மதுரையை சேர்ந்த சிறுமி ஒருவரும், வீரமணியால் பாலியல் வன்முறைக்கு ஆளானதாக, சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி பத்மா முன், வீரமணி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரது நீதிமன்ற காவல், வரும், 21ம் தேதி வரை நீடித்து உத்தரவிடப்பட்டது.