இந்தியாவை வளர்ந்த பாரதமாக மாற்றும் முக்கிய இயந்திரமாக இளைஞர்கள் சக்தி செயல்படும்: கவர்னர் கைலாஷ்நாதன் பேச்சு
வானுார்: ‘இந்தியாவை வளர்ந்த பாரதமாக மாற்றும் முக்கிய இயந்திரமாக இளைஞர்கள் சக்தி செயல்படும்’ என கவர்னர் கைலாஷ்நாதன் பேசினார்.
சர்வதேச நகரமான ஆரோவில் யூனிட்டி பெவிலியனில், இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் ஒற்றுமையை கொண்டாடும் விதமாக ஒரே பாரதம் உன்னத பாரதம் திட்டத்தின் கீழ் ‘வந்தே மாதரம் தேசிய ஒருமைப்பாட்டு முகாம்’ துவக்க விழா நேற்று நடந்தது.
தமிழ்த்தாய் வாழ்த்து, வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதம் முழங்க துவங்கிய இந்த முகாமில் உத்தரகாண்ட், தெலுங்கானா, தமிழ்நாடு, கேரளா, ஒடிசா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்களை சேர்ந்த, 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இவர்களுடன் ஆரோவில் பகுதியை சேர்ந்த இளைஞர்களும் ஒன்றிணைந்துள்ளனர். இதன் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன் கலந்து கொண்டார். அவர் விழாவை துவக்கி வைத்து பேசியதாவது:
பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப வரும், 2047ம் ஆண்டுக்குள், இந்தியாவை வளர்ந்த பாரதமாக மாற்றும் முக்கிய இயந்திரமாக நமது இளைஞர் சக்தி செயல்படும்.
நாம் வெவ்வேறு மொழிகளை பேசினாலும், நமது தேசிய உணர்வு ஒன்றே. மகாகாவி சுப்ரமணிய பாரதியார் பாடியதை போன்று நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
இளைஞர்கள் சவால்களை எப்படி வரலாற்று வெற்றிகளாக மாற்ற வேண்டும் என்பதற்கு, ‘கோவிட்-19’ பெருந்தொற்று காலத்தில் பிரதமர் காட்டிய அசாதாரணமான தலைமைத்துவமே சான்று.
நமது, 140 கோடி மக்களுக்கும் தடுப்பூசி போடும் மிகப்பெரிய சவால் வந்தபோது, நாம் விலை உயர்ந்த வெளிநாட்டு இறக்குமதிகளை சார்ந்து இருந்திருக்கலாம். ஆனால், பிரதமர் அதிரடியாக செயல்பட்டு, ஒரே நாளில் டில்லியில் இருந்து அகமதாபாத், புனே மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் உள்ள தடுப்பூசி உற்பத்தி மையங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்த சிறப்பான தலைமைத்துவம் நமது உள்நாட்டுத் தடுப்பூசி உற்பத்தியில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியதோடு மட்டுமில்லாமல், உலகெங்கிலும் உள்ள 150 நாடுகளுக்கு உயிர் காக்கும் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்யவும் இந்தியாவிற்கு உதவியது.
ஒரு சிறப்பான தலைமைத்துவம் உலகை எப்படி மாற்றும் என்பதற்கு இதுவே சாட்சி. இதே லட்சியத்தோடு நமது இளைஞர்களும் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் நமச்சிவாயம், அரசு செயலர் முத்தம்மா, செய்தி விளம்பரத்துறை இயக்குநர் சுதாகர், ஆரோவில் அறக்கட்டளை சிறப்பு அதிகாரி சீத்தாராமன், மூத்த ஆலோசகர் வேணுகோபால், மை பாரத் இயக்கத்தின் புதுச்சேரி மாநில இயக்குநர் டிராவீன் சார்லஸ்டன், மாவட்ட இளைஞர் அதிகாரி சுக்காஷாலேம் ராஜூ உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவை முன்னிட்டு, உத்தரகண்ட் மாநிலத்தை சேர்ந்த இளைஞர்களின் கண்கவர் கலாசார நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருந்தது.
மேலும்
-
சிறப்பான பயிற்சி பெற்றால் எல்லாரும் ஜெயிக்கலாம்; பிரக்ஞானந்தா ஊக்கம்
-
உலக சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் ராமநாதபுரம் கல்லுாரி பேராசிரியர்
-
மத்திய அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும்; மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு
-
காட்டுயானைகள் முகாம்
-
போலீஸ் செய்திகள்: திண்டுக்கல்
-
கோவில் நிலம் ஆக்கிரமிப்பு; மக்கள் மறியல்