13 வயதில் 186 கிலோ எடை; சிறுவனுக்கு டில்லி மருத்துவ மனையில் சிகிச்சை

புதுடில்லி: டில்லியில் உள்ள மருத்துவமனையில், 13 வயதில், 186 கிலோ எடையுடன், உடல் பருமன் மற்றும் அதனால் ஏற்படும் மூச்சுத் திணறல் பிரச்னைகளால் ஒரு சிறுவன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான்.

அந்த சிறுவன், உணவு கட்டுப்பாடு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களை மேற்கொண்ட போதும், சிறு வயதில் இருந்தே உடல் பருமன் அதிகரித்து வந்துள்ளது. அந்த சிறுவனின் 13 வயதில், 186 கிலோ எடையுடன் உள்ளான்.

அதிக பருமானால், துாக்கத்தில் கடும் மூச்சு திணறல், மூட்டு வலி உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்பட்டான். சிறுவனின் பெற்றோர் இருவருமே உடல் பருமானால் அவதிப்பட்டு, எடை குறைப்புக்கான அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள். இதனால், சிறுவனுக்கும் அதே பாதிப்பு ஏற்பட்டதாக கருதப்படுகிறது.

இதையடுத்து, அந்த சிறுவனுக்கு டில்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் எடை குறைப்புக்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. லேப்ராஸ்கோபிக், லேசர் மற்றும் பொது அறுவைச் சிகிச்சை துறையின் ஆலோசகரான டாக்டர் தருண் மிட்டல் தலைமையிலான டாக்டர்கள் குழுவினர், இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்தனர்.

இந்த சிகிச்சைக்குப் பிறகு, அந்தச் சிறுவன் 20 கிலோவுக்கும் அதிகமான எடையைக் குறைத்துள்ளான். அவனது சுவாசம், குறட்டை, துாக்கத்தின் தரம், நடமாடும் திறன் மற்றும் மூட்டு வலி ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவனது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்கு, அவனது எடை தொடர்ந்து குறையும் என்றும், உணவுப் பரிந்துரைகளைக் கடைப்பிடித்தல், உடல் செயல்பாடு, ஊட்டச்சத்து ஆதரவு ஆகியவற்றைப் பொறுத்தே நீண்டகால விளைவு அமையும் என்று டாக்டர்கள் கூறினர்.

Advertisement