மேல்நிலை தொட்டி கட்டி 12 வருடமாச்சு: குடிநீர் என்னாச்சு
கொட்டாம்பட்டி: கச்சிராயன் பட்டி, காடு காவல் நகர் பகுதி மக்களுக்கு குடிநீர் இல்லாததால் கிராமம் கிராமமாக குடிநீரை தேடி அலையும் அவலம் நிலவுகிறது.
இக் கிராமத்தில் வசிக்கும் 200க்கும் மேற்பட்டோருக்காக 2014 குடிநீர் வடிகால் வாரியம் மூலம் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. கச்சிராயன்பட்டியில் இருந்து குழாய்கள் பதித்து காவிரி கூட்டுக் குடிநீர் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரு மாதம் குடிநீர் விநியோகித்ததுடன் இன்று வரை பயன்பாட்டுக்கு வரவில்லை.
அப்பகுதி ராஜேந்திரன் கூறியதாவது. காவிரி குடிநீர் வராததால் இப்பகுதி ஆழ்துளை குழாய் மூலம் வினியோகிக்கும் தண்ணீரை சுத்திகரிப்பு இயந்திரம் பொறுப்பாளர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் குடிநீராக பயன்படுத்த முடியாத அளவுக்கு அதிக உப்பு எனத் தெரிந்தது.
தண்ணீரை பருகுவோர் தொற்று நோய்களுக்கு ஆளாகிறோம். அதனால் நான்கு கி.மீ., யில் உள்ள பால்குடியில் போய் குடிநீர் கொண்டு வருகிறோம். ஒரு குடம் தண்ணீர் ரூ. 25க்கு விலைக்கு வாங்கும் அவலம் நிலவுகிறது. பி.டி.ஓ., உள்ளிட்ட அதிகாரியிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்றார்.
காவிரி குடிநீர் திட்ட அதிகாரிகள் கூறுகையில், ''குறைவான மின்னழுத்தம் உள்ள நாட்களில் மேல்நிலைத் தொட்டியில் தண்ணீர் ஏற்ற முடியவில்லை. ஆய்வு செய்து தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றனர்.