ஏ.ஐ., வீடியோக்கள் பயன்படுத்த டாக்டர்களுக்கு தடை!

புதுடில்லி: ஏ.ஐ., எனப்படும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நோயாளிகளின் போலியான அனுபவங்கள், சிகிச்சை முடிவுகள் மற்றும் பரிந்துரைகளை உருவாக்க, டாக்டர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் தடை விதித்துள்ளது. இது தொடர்பான வழிகாட்டுதல்களை நேற்று வெளியிட்டுள்ள ஆணையம், 'விதிகளை மீறுவோர் ஓராண்டு வரை பணியிடை நீக்கம் செய்யப்படுவர்' என, எச்சரித்துள்ளது.

சமீப காலமாக, சமூக வலைதளங்களில் வெளியாகும் விளம்பரங்களில் ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. மருத்துவம் தொடர்பான விளம்பரங்களிலும் ஏ.ஐ.,யின் பயன்பாடு அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில், மருத்துவ சேவைகள் குறித்த தவறான விளம்பரங்களை கட்டுப்படுத்தும் நோக்கில், ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்த தேசிய மருத்துவ ஆணையம் தடை விதித்துஉள்ளது.

புது விதிகள்



இது தொடர்பாக வெளியிடப்பட்ட வழிக்காட்டுதல்களின் விபரம்: பதிவு செய்யப்பட்ட டாக்டர்கள் மற்றும் மருத்துவமனைகள் தங்கள் சேவைகளை விளம்பரப்படுத்தவோ, நோயாளிகளை ஈர்க்கவோ அல்லது நோய் கண்டறிதல், சிகிச்சைகள் மற்றும் முடிவுகள் தொடர்பான தகவல்களை பரப்பவோ ஏ.ஐ.,யால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தை பயன்படுத்தக்கூடாது.

நோயாளிகளின் செயற்கையான கருத்துகள், போலியான பரிந்துரைகள் மற்றும் மருத்துவ சேவை களை தவறாக சித்தரிக்கும் வகையிலோ ஏ.ஐ.,யை பயன்படுத்தக் கூடாது. ஒரு மருத்துவ சேவை, உண்மையாக இருப்பதை விட, மிகைப்படுத்தவோ அல்லது சிறப்பானதாகவோ காட்டக்கூடிய ஏ.ஐ.,யால் உருவாக்கப்பட்ட காட்சிகளை பயன்படுத்தவும் தடை விதிக்கப்படுகிறது.

தேடுபொறிகள் மற்றும் செயலிகளில் தங்கள் தரவரிசையை மாற்றியமைக்க பணம் செலுத்த டாக்டர்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. நோயாளிகளை அழைத்து வர இடைத்தரகர்களின் பங்களிப்பு அதிகரித்து வருவது கட்டுப்படுத்தப்படுகிறது.

நோயாளிகளை டாக்டர்களிடம் அழைத்து வருவ தற் காக, சமூக ஊடக பிரபலங் கள், விளம்பர நிறுவனங் கள் அல்லது ஆன்லைன் தளங்களிடம் பணப்பரிவர்த்தனை அடிப்படையிலான ஒப்பந்தங்களை டாக்டர்கள் செய்யக்கூடாது.

டாக்டர்களும், மருத்துவமனைகளும் குறிப்பிட்ட கால தள்ளுபடிகள், பரிசுப் பொருட்கள், அதற்கான கூப்பன்களை நோயாளிகளுக்கு வழங்கக் கூடாது. நோயாளிகளின் புகைப்படத்தை பயன்படுத்துவதற்கு முன், அவரின் முறையான ஒப்புதலை பெற வேண்டும். அந்த புகைப்படங்கள் தவறான முறையில் பயன்படுத்தப்படாமல் இருப்பதற்கான உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

நோயாளிகளின் பாராட்டுகள் அல்லது சிகிச்சை அனுபவங்களை விளம்பரப்படுத்துவது, சிகிச்சைக்கு முன் மற்றும் பின் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிடவும் தடை விதிக்கப்படுகிறது. 'சிறந்தது, முதன்மையானது, மிகவும் நம்பகமானது, உறுதியான தீர்வு, 100 சதவீத வெற்றி' போன்ற வார்த்தைகளை, டாக்டர்கள் அல்லது மருத்துவமனைகள் பயன்படுத்தக்கூடாது.

வழிகாட்டு நெறிகள்



இந்த வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தும் உடனடியாக அமலுக்கு வருகின்றன. முதல்முறையாக விதிமீறலில் ஈடுபட்டால் எச்சரிக்கை மற்றும் கட்டாய நெறிமுறைப் பயிற்சி ஆகியவை பரிந்துரைக்கப்படும். இரண்டாவது முறை விதிமீறலுக்கு கண்டனம் மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.

மூன்றாவது முறை விதிமீறலுக்கு மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை பணியிடை நீக்கம் செய்யப்படலாம். தீவிரமான விதிமீறலுக்கு, ஆறு முதல் 12 மாதங்கள் வரை இடைநீக்கம் செய்யப்படலாம். தொடர் விதிமீறல்க ளுக்கு ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் வரை மருத்துவப் பதிவேட்டிலிருந்து பெயர் நீக்கம் செய்யப்படலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement