நாமக்கல்லில் கம்பன் விழா: புதுச்சேரி அமைச்சர் பங்கேற்பு

நாமக்கல்:நாமக்கல் கம்பன் கழகம் சார்பில், கம்பன் விழா நாளை (10ம் தேதி) மற்றும் 11ம் தேதி என 2 நாட்கள், சனு இண்டர்நேஷனல் ஹோட்டலில் நடைபெறுகிறது. நாளை மாலை, 5:00 மணிக்கு துவக்க விழா நடைபெறுகிறது.

தொழிலதிபர்கள் நல்லதம்பி, நல்லுசாமி, சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். கம்பன் கழக தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகிக்கிறார். செயலாளர் அரசு பரமேஸ்வரன் வரவேற்கிறார். புதுச்சேரி கம்பன் கழக தலைவரும், பொது வினியோகத்துறை அமைச்சருமான சிவக்கொழுந்து, விழாவை துவக்கி வைத்து பேசுகிறார்.

புதுக்கோட்டை கவிதை பித்தனுக்கு கம்பர் விருதும், கோபி புதுப்பாளையம் நல்ல சாமிக்கு கம்பன் மாமணி விருதும் மற்றும் துறைசார் வல்லுனர் விருதும் வழங்கப்படுகிறது. பின், புலவர் கவிதை பித்தன் தலைமையில், கவியரங்கம் நடைபெறுகிறது. இந்த அரங்கில் 'இவர்கள் பேசினால்' என்ற தலைப்பில், சீதையாக கங்கை மணிமாறன், சூர்ப்பனகையாக இளங்கோவன், மண்டோதரியாக தஞ்சை இனியன், கைகேயியாக மகாசுந்தர் ஆகியோர் கவிதை பாடுகின்றனர்.

11ம் தேதி மாலை, 6:00 மணிக்கு 2ம் நாள் நிகழ்ச்சியை, நாமக்கல் தமிழ்ச்சங்க தலைவர் டாக்டர் குழந்தைவேல் துவக்கி வைக்கிறார். சென்னை சுகிசிவம் தலைமையில், கவிச்சக்ரவர்த்தி கம்பன் பெண்மையை போற்றினார், போற்றவில்லை என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறுகிறது.
போற்றினார் என்ற தலைப்பில் கோவை கவுசிகா பானு, தஞ்சை அட்சயா லோகேஷ்குமார் ஆகியோர் பேசுகின்றனர். போற்றவில்லை என்ற தலைப்பில் புதுக்கேட்டை பாரதி, திருச்சி சாத்தம்மை பிரியா ஆகியோர் பேசுகின்றனர்.

Advertisement