கோவையில் காட்டுக்குள் சட்ட விரோதமாக செயல்பட்ட 13 ரிசார்ட்டுகளுக்கு பூட்டு

4

கோவை: கோவையில் அடர்ந்த வனப்பகுதியில் சட்ட விரோதமாக செயல்பட்ட, 13 ரிசார்ட்டுகள் மூடப்பட்டன; 12 ரிசார்ட்டுகளை மூடுவதற்கு இறுதி கட்ட நடவடிக்கை எடுத்து வருவதாக, சென்னை ஐகோர்ட்டில் கலெக்டர் பவன்குமார் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

கோவை மாவட்டம் எண் 24 வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம் ஊராட்சிகளில், ஆனைகட்டி வனப்பகுதியில், யானைகள் வலசை செல்லும் பாதையை ஆக்கிரமித்து, சட்ட விரோதமாக ரிசார்ட்டுகள் நடத்தப்படுவதாக, சென்னை ஐகோர்ட்டில் சமூக ஆர்வலர் முரளிதரன் வழக்கு தொடர்ந்தார். கள ஆய்வு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு உத்தரவிடப்பட்டது.

கலெக்டர் தலைமையிலான குழு ஆய்வு செய்து, 'மொத்தம் 10 ரிசார்ட்டுகள் இருக்கின்றன. அதில், இரண்டுக்கு அனுமதி இருக்கிறது; எட்டு அனுமதி பெறாமல் செயல்படுகின்றன' என, அறிக்கை தாக்கல் செய்தது. அனுமதியின்றி செயல்படும் ரிசார்ட்டுகளை உடனடியாக மூட உத்தரவிட்ட நீதிபதிகள், அனுமதி பெற்றதாக கூறப்படும் ரிசார்ட்டுகளின் ஆவணங்களை சரிபார்க்க அறிவுறுத்தினர்.

மனுதாரர் தரப்பில், வனப்பகுதியில் 33 ரிசார்ட்டுகள் இருப்பதாக கூறியதோடு, அதன் பட்டியலோடு கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகள், பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ள ரிசார்ட்டுகளையும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

33 இடங்கள் ஆய்வு



இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. கலெக்டர் பவன்குமார் அறிக்கை சமர்ப்பித்தார். அதில், நகர ஊரமைப்பு துறை, ஊரக வளர்ச்சி துறை, வருவாய்த்துறை மற்றும் வனத்துறை அடங்கிய குழுவினர், ரிசார்ட்டுகள் அமைந்துள்ள பகுதிகளில் கூட்டாய்வு செய்தனர்; ஆவணங்களை சரிபார்த்தனர். 33 இடங்களும் ஆய்வு செய்யப்பட்டன.

நகர ஊரமைப்பு துறையில் அனுமதி பெறாதது, ஊராட்சி அலுவலகத்தில் அனுமதி பெறாதது, வனத்துறையில் தடையின்மை சான்று பெறாதது உள்ளிட்ட எவ்வித அனுமதியும் இல்லாமல் செயல்பட்ட, 13 ரிசார்ட்டுகள் அதன் உரிமையாளர்களால் மூடப்பட்டு உள்ளன. 12 ரிசார்ட்டுகளை மூடுவதற்கு இறுதி கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

டார்ஸா ரிசார்ட்ஸ், மை வில்லேஜ் ஈகோ டூரிஸ்ட் ரிசார்ட், வைல்டு டோர் கபே ஆகியவை அனுமதி பெற்று செயல்படுகின்றன; ஐந்து இடங்கள் ரிசார்ட்டுகள் அல்ல; குடியிருப்புகளாக இருக்கின்றன என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

காரமடை ஆரா ஜங்கிள் ரிசார்ட் வளாகத்தில், அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்துக்கு மாறாக, கூடுதல் கட்டடங்கள் கட்டியதால், நகர ஊரமைப்பு துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது. எஸ்.ஆர். ஜங்கிள் ரிசார்ட் நிறுவனம், கட்டட அனுமதிக்கு தற்போது விண்ணப்பித்துள்ளது. நகர ஊரமைப்பு துறை அனுமதியை எட்டு வாரங்களுக்குள் வழங்க உத்தரவிட கோரி வழக்கு தொடர்ந்துள்ளது. இருந்தாலும், மூடல் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tamil News
Tamil News

வரன்முறைப்படுத்த முடியாது



மனுதாரர் முரளிதரன் கூறுகையில், ''மூடப்பட்ட 13 ரிசார்ட்டுகள் மற்றும் ரிசார்ட்டுகள் இல்லை என கருதப்படும் ஐந்து இடங்களில் போடப்பட்டுள்ள நிரந்தர வேலியை உடனடியாக அகற்ற வேண்டும். இவை வன விலங்குகள் உலாவும் பகுதி; சுதந்திரமாக நடமாட அனுமதிக்க வேண்டும்.

மூடிய ரிசார்ட்டுகளின் மின் இணைப்பை துண்டிக்க வேண்டும். அனுமதி பெற்றிருப்பதாக கூறப்படும் ரிசார்ட்டுகளில் 2025 டிசம்பர் மற்றும் 2026 பிப்ரவரியில் ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது. அதுவரை அனுமதி பெறாமல் சட்ட விரோதமாக செயல்பட்டிருக்கின்றன. ஆய்வு செய்தபின் எப்படி அனுமதி பெறப்பட்டது என்கிற கேள்வி எழுந்தது; இவற்றை வரன்முறைப்படுத்த முடியாது. அந்த மூன்று ரிசார்ட்டுகளையும் வழக்கில் சேர்த்து, நோட்டீஸ் வழங்க அறிவுறுத்தப்பட்டது,'' என்றார்.

Advertisement