திருப்பரங்குன்றம் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் திருவிழா: மலையில் கதம்ப சாதம் சமைக்க தடையால் மக்கள் கொதிப்பு
திருப்பரங்குன்றம்: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழாவை முன்னிட்டு நேற்று மலை மேல் கதம்ப சாதம் தயாரித்து பக்தர்களுக்கு வழங்குவதற்கு தடை விதிக்கப்பட்டது. அதனால் கிராமத்தினர் மலைமேல் 'வேல்' கொண்டு செல்ல மறுப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று மாலையில் நீதிமன்ற தீர்ப்பு வந்த பின்பு கிராமத்தினர் மலைமேல் வேல் கொண்டு சென்றனர்.
நக்கீரருக்கு சாப விமோசனம் கொடுக்க சுப்பிரமணிய சுவாமி தனது கரத்தில் உள்ள வேல் மூலம் திருப்பரங்குன்றம் மலை பாறையில் கீறி கங்கைக்கு நிகரான தீர்த்தத்தை சுனையில் உருவாக்கிய நிகழ்ச்சியை நினைவு கூரும் வகையிலும், மழை வேண்டியும் கோயில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கரத்தில் உள்ள தங்க வேல் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் மலை மேல் கொண்டு செல்லும் விழா உள்ளூர் மக்கள் சார்பில் நடத்தப்படுகிறது. மக்கள் சார்பில் 105 படி அரிசியில் கதம்ப சாதம் மலையில் சமைத்து பக்தர்களுக்கு வழங்கப்படும். ஆண்டாண்டு காலமாக இது நடந்து வருகிறது.
12 நிபந்தனைகள் விதிப்பு
இந்தாண்டு இத்திருவிழா குறித்து கோயில் நிர்வாகம், மலையை பராமரிக்கும் மத்திய தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவித்தது. கோயில் துணை கமிஷனர் செல்விக்கு நேற்று முன்தினம் மத்திய தொல்லியல் துறை அனுப்பிய கடிதத்தில், மலை மேல் நெருப்பினால் சமையல் செய்யக்கூடாது உட்பட 12 நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. இதை அறிந்த மக்கள் கோயில் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதிகாரிகள் சமரசத்தை தொடர்ந்து அதிகாலை 2:00 மணிக்கு கலைந்து சென்று நேற்று காலை மீண்டும் கோயில் முன்பு கூடினர். போலீசார் குவிக்கப்பட்டனர். மலை மேல் கதம்ப சாதம் சமைக்க அனுமதிக்காவிட்டால் மலைமேல் 'வேல்' கொண்டு செல்ல மாட்டோம் எனக்கூறிவிட்டு கோயில் முன்பு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கும் தொடர்ந்தனர்.
கடிதத்தால் குழப்பம்
இதற்கிடையே மதியம் மத்திய தொல்லியல் துறையினரிடமிருந்து கோயில் அலுவலகத்திற்கு வந்த கடிதத்தில், 'வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. பாரம்பரிய முறைப்படி திருவிழா நடத்துவதற்கு அனுமதிக்கலாம்' என தெரிவிக்கப்பட்டது. கோயில் நிர்வாகம் தரப்பில், 'மத்திய தொல்லியல் துறை முதலில் அனுப்பிய கடிதத்தில் மலை மேல் சமைப்பதற்கு தடை விதித்திருந்தது. அதை நீக்கி கடிதம் அனுப்புமாறு நாங்கள் கடிதம் அனுப்பி இருந்தோம். அடுத்து வந்த கடிதத்தில் அந்த வாசகத்தை நீக்கியதாக தொல்லியல்துறை குறிப்பிடவில்லை' என்றனர். குழப்பம் அடைந்த உள்ளூர் மக்கள் கோயில் முன்பு கூடி ஆலோசித்தனர்.
காலைக்கு பதில் மாலை
ஆண்டுதோறும் வேல் எடுக்கும் திருவிழாவில் காலை 9:30 மணிக்கு வேல் புறப்பட்டு, ஒருமணி நேரம் வீதி உலா வரும். 10:30 மணிக்கு மலை மேல் கொண்டு செல்லப்படும். காலை 11:30 மணிக்குள் சுப்பிரமணிய சுவாமி கையில் வேல் வழங்கப்படும். மதியம் 12:00 மணிக்கு சுனை தீர்த்திற்கு சிவாச்சாரியார்கள் கொண்டு சென்று அபிேஷகம் செய்து மீண்டும் சுவாமி கையில் கொடுப்பர். இதன் பிறகு 150 படி அரிசியில் கிராம மக்களால் கதம்ப சாதம் தயார் செய்து சுவாமிகளுக்கு படைத்து பிரசாதமாக வழங்குவர். நேற்று தடை உத்தரவு, நீதிமன்ற விசாரணை போன்ற காரணங்களாலும், மாலையில் நீதிமன்றத்தின் சாதகமான உத்தரவாலும் மாலை 5:30 மணிக்குதான் கோயிலைவிட்டே வேல் மலைக்கு புறப்பட்டது. முன்னாள் அறங்காவலர் சண்முகசுந்தரம் கலந்து கொண்டார்.
மலை மேல் வேல் எடுக்கும் திருவிழாவில் மலைமேல் வேல் கொண்டு செல்லும் காட்சியும், சுனை தீர்த்தத்தில் சிவாச்சாரியார்களால் வேலுக்கு அபிஷேகம் செய்யப்படும் காட்சிகளையும் வெளியிடுவதற்காக பத்திரிகையாளர்கள் மலை மேல் செல்ல அனுமதிக்கப்படுவர். இந்த ஆண்டு பத்திரிகையாளர்கள் மலை மேல் செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர்.
@block_B@வழிபாட்டு நடைமுறைகளில் தலையிடவில்லை: நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
திருப்பரங்குன்றம் மலைமேல்குமாரர் விழா நடத்த, மலையில் சமைப்பது அல்லது தீயுடன் தொடர்புடைய எந்தவொரு செயலிலும் ஈடுபடுவது தடை செய்யப்படுகிறது என்ற நிபந்தனை மட்டும் வாபஸ் பெறப்படுகிறது என மத்திய அரசு தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மலைமேல்குமாரர் திருவிழாவையொட்டி மத்திய தொல்லியல்துறை (ஏ.எஸ்.ஐ.,) அக்.,8 ல் ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில்,‛மலை பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னம். அவ்வளாகத்தில் மலைமேல்குமாரர் திருவிழாவை நடத்த நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. திருவிழாவின்போது நினைவுச் சின்னத்தின் எந்தவொரு பகுதியும் அல்லது தொல்லியல் அம்சங்களும் சேதமடையக் கூடாது. விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழாமல் தடுக்க பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும். மலையில் சமைப்பது அல்லது தீயுடன் தொடர்புடைய எந்தவொரு செயலிலும் ஈடுபடுவது தடை செய்யப்படுகிறது என்பன உள்ளிட்ட 12 நிபந்தனைகள் இடம்பெற்றுள்ளது. இதற்கு எதிராக திருப்பரங்குன்றம் பிரபு, தேனி பழனிசெட்டிபட்டி பாண்டியராஜன் உயர்நீதிமன்றக் கிளையில் நேற்று அவசர வழக்கு தாக்கல் செய்தனர்.
நீதிபதிகள் பி.வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது. மத்திய அரசு தரப்பில்,‛ வழிபாட்டு நடைமுறைகளில் தலையிடவில்லை. பிரசாதம் தயாரிப்பு, அதை வினியோகிப்பதில் தலையிடவில்லை. மலையில் சமைப்பது அல்லது தீயுடன் தொடர்புடைய எந்தவொரு செயலிலும் ஈடுபடுவது தடை செய்யப்படுகிறது என்ற நிபந்தனை மட்டும் வாபஸ் பெறப்படுகிறது,' என தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: விழாவை நடத்தலாம். போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றனர்.block_B
@block_G@
திருப்பரங்குன்றத்தில் பா.ஜ., இளைஞரணி மாநில தலைவர் சூர்யா கூறியதாவது: பல நுாற்றாண்டாக மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் திருவிழாவில் கதம்ப சாதம் சமைத்து பக்தர்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதுவரை தொல்லியல் துறையிடம் அறநிலையத்துறை அனுமதி கேட்டது கிடையாது. முதல் முறையாக அனுமதி கேட்டு கோயில் நிர்வாகம் கடிதம் அனுப்பிய நிலையில், சட்டங்களுக்குட்பட்டு திருவிழாவை கொண்டாடலாம் என தொல்லியல் துறை பதில் அளித்தது. ஆனால் 'மலை மேல் சமைக்கக்கூடாது' என கோயில் நிர்வாகம் தெரிவிக்கிறது. உடனடியாக நாங்கள் மத்திய தொல்லியல் துறையினரை அணுகி உண்மை நிலையை தெரிவித்தோம். நேற்று முன்தினம் இரவு 11:00 மணிளவில் மத்திய தொல்லியல் துறை மூலமாக அறநிலையத்துறை, போலீஸ் கமிஷனர், மாநகராட்சி கமிஷனருக்கு அனுப்பிய செய்தியில், 'மலை மேல் பாரம்பரியமாக திருவிழா நடத்திக் கொள்ள எங்களுக்கு ஆட்சேபனை இல்லை' என தெரிவித்திருந்தனர். ஆனால் போலீசார் 'ஆர்டர் காப்பி' கேட்கின்றனர். இப்பிரச்னையில் முழுக்க முழுக்க அரசியல் மட்டுமே உள்ளது. ஆயிரம் ஆண்டுகளாக பின்பற்றும் நடைமுறைக்கு எதிராக த.வெ.க., அரசு செயல்படுகிறது. இந்த பிரச்னையில் த.வெ.க., அரசு மத்திய அரசு மீது வீண் பழி சுமத்துகிறது. நவ., 24ல் கார்த்திகை தீப விழா நடக்கிது. அன்று நீதிமன்ற உத்தரவுப்படி தீபம் ஏற்றப்பட வேண்டும். இவ்வாறு கூறினார்.block_G
யாரை திருப்திப்படுத்த தடை* குன்றத்து மக்கள் கொதிப்பு
உள்ளூர் மக்கள் கூறியதாவது:
கருப்பாயி: எனக்கு 62 வயதாகிறது. சிறு வயது முதலே ஆண்டுதோறும் வேல் எடுக்கும் திருவிழாவில் சுவாமி தரிசனம் முடித்து கதம்ப சாதம் பிரசாதத்தை சாப்பிட்டு வருகிறேன். இந்த ஆண்டு மலை மேல் கதம்ப சாதம் சமைக்க யாரை திருப்திப்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹிந்துக்களுக்கு மட்டும்தான் சுவாமி கும்பிடுவதற்கு இப்படி தடை விதித்து கொண்டே செல்கின்றனர்.
தனம்: திருப்பரங்குன்றத்தை மட்டும்தான் குறி வைக்கின்றனர். எங்களது பாரம்பரியத்தை ஒவ்வொன்றாக தடை செய்து வருகின்றனர். மலை மேல் உள்ள தீபத்துாணில் கார்த்திகை மகா தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் அதற்கு தடை விதித்தனர். ஆண்டாண்டு காலமாக நடந்து வரும் மலைமேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழாவிற்கும் தடை விதிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் இந்த ஆண்டு கதம்ப சாதம் சமைப்பதற்கு தடை விதித்துள்ளனர்.
தேன்மொழி: இது தராசுக்கார முருகப் பெருமான் பூமி. யார் தவறு செய்தாலும் தண்டனை அனுபவிப்பர் என்பது மக்களின் நம்பிக்கை. விளையாடுபவர்களை முருகன் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்.
சவுந்தர்ராஜன்: இந்த ஆண்டு மட்டும் எதற்காக கதம்ப சாதம் சமைக்க தடை விதித்து உள்ளார்கள் என்பது தெரியவில்லை. ஹிந்துக்களையும், ஹிந்து மதத்தையும் அழிப்பதற்கான வேலையைத்தான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றனர். எங்களது பாரம்பரிய முறைகளை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது.
பிரபு: வேல் எடுக்கும் திருவிழாவில் அனைத்து கிராமத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரின் பங்கும் உள்ளது. தடை விதித்துள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது. இவ்வாறு கூறினர்.
மேலும்
-
எம்ஜிஆராக, ஜெயலலிதாவாக விஜயை அதிமுகவினர் பார்க்கின்றனர்: அமைச்சர் ஆதவ் கருத்து
-
கேரள மாஜி முதல்வர் பினராயி விஜயன், அவர் மகள் மீது வழக்கு பாய்கிறது!: ஐகோர்ட் உத்தரவு
-
இடைத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் டிபாசிட் பறி கொடுத்த கம்யூ., கட்சிகள்
-
வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 2வது டி - 20 கிரிக்கெட்: இந்திய அணி 249 ரன் குவிப்பு
-
ஜனாதிபதியுடன் ராகுல் தலைமையில் இண்டி கூட்டணி எம்பிக்கள் சந்திப்பு
-
நடிகர் நானா படேகர் மரணத்தில் மர்மம்; வழக்குப் பதிந்தது கோவா போலீஸ்