கேரள மாஜி முதல்வர் பினராயி விஜயன், அவர் மகள் மீது வழக்கு பாய்கிறது!: ஐகோர்ட் உத்தரவு
கொச்சி :
கேரளாவில், 2016 -- 26 வரை மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பினராயி விஜயன் முதல்வராக பதவி வகித்தார். அப்போது, 2017ல் அவரது மகள் வீணாவுக்கு சொந்தமான, தற்போது செயல்பாட்டில் இல்லாத, 'எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ்' என்ற ஐ.டி., நிறுவனத்துக்கு, எந்தவொரு தகவல் தொழில்நுட்ப சேவையும் பெறாமல், 2.78 கோடி ரூபாயை, சி.எம்.ஆர்.எல்., எனப்படும், 'கொச்சின் மினரல்ஸ் அண்டு ரூட்டைல்லிமிடெட்' நிறுவனம் வழங்கியது, வருமான வரித்துறை சோதனையில் தெரிய வந்தது.
இதன்படி, சட்ட விரோத பணப் பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த அமலாக்கத் துறை, பினராயி விஜயன், வீணா, அவரது கணவரும், முன்னாள் அமைச்சருமான முகமது ரியாஸ் தொடர்புடைய இடங்களில், கடந்த மே மாதம் சோதனை நடத்தியது. கேரளாவில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் பினராயி விஜயன், வீணா உள்ளிட்டோர் மீது எப்.ஐ.ஆர்., பதியக்கோரி, கடந்த மாதம் மாநில போலீசுக்கு அமலாக்கத் துறை கடிதம் எழுதியது. எனினும், காங்., அரசு தீவிரம் காட்டவில்லை.
'சி.எம்.ஆர்.எல்., -- எக்ஸாலாஜிக்' நிறுவன லஞ்ச வழக்கில், அமலாக்கத் துறை அறிக்கையின் அடிப்படையில், பினராயி விஜயன், வீணா உள்ளிட்டோர் மீது எப்.ஐ.ஆர்., பதியக்கோரி, வழக்கறிஞர் கே.எம்.ஷாஜஹான் என்பவர் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, நீதிபதி ஏ.பதருதீன் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
அப்போது, 'தாங்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையிலேயே பினராயி விஜயன், அவரது மகள் வீணா உள்ளிட்டோர் மீது எப்.ஐ.ஆர்., பதியலாம். ஆனால், கேரள போலீசார் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துகின்றனர்' என, அமலாக்கத் துறை தரப்பில் வாதிடப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கேரள அரசு தரப்பு வழக்கறிஞர்கள், 'அமலாக்கத் துறையின் அறிக்கை மட்டுமே எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய போதுமானதாக இருக்காது. மாநில போலீசார் முறைப்படி முதற்கட்ட விசாரணை நடத்த வேண்டியது அவசியம்' என்றனர்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஏ.பதருதீன், பினராயி விஜயன், வீணா உட்பட குற்றம் சாட்டப்பட்டோர் மீது, ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் எப்.ஐ.ஆர்., பதிய உத்தரவிட்டார்.
மேலும்
-
கைது செய்யும் அதிகாரம் ஜி.எஸ்.டி., அதிகாரிகளிடம் பறிப்பு; தொழில் துறையினர் வரவேற்பு
-
த.வெ.க., கூட்டணியில் கம்யூ., கட்சிகள் நீடிக்குமா? வரும் அக்.,12ல் ஆலோசனை
-
ஆர்க்டிக் ஓபன் பாட்மின்டன்: சிந்து ஏமாற்றம்
-
எம்ஜிஆராக, ஜெயலலிதாவாக விஜயை அதிமுகவினர் பார்க்கின்றனர்: அமைச்சர் ஆதவ் கருத்து
-
இடைத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் டிபாசிட் பறி கொடுத்த கம்யூ., கட்சிகள்
-
வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 2வது டி - 20 கிரிக்கெட்: இந்திய அணி 249 ரன் குவிப்பு