குடியரசு தின தடகள போட்டிகள்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான வருவாய் மாவட்ட அளவிலானகுடியரசு தின தடகளபோட்டி இரண்டு நாட்கள் நடந்தது. முதன்மைக் கல்வி அலுவலர் செல்வக்குமார் போட்டிகளை துவக்கி வைத்தார். மாவட்ட கல்வி அலுவலர் அமுதா, பழநி கல்வி மாவட்ட அலுவலர் பரிமளா, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஜெயந்தி, மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ரஹமத்கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

2 ஆயிரம் மாணவ, மாணவிகள் ஓட்டம், தடை தாண்டும் ஓட்டம், தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், தட்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகளில் பல்வேறு பிரிவுகளில்பங்கேற்றனர்.

மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கூறுகையில், ‘குறுவட்ட அளவில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் வருவாய் மாவட்ட தடகள போட்டிகளில் பங்கேற்று உள்ளனர். முதல், 2ம் இடம் பெற்ற வீரர், வீராங்கனைகள் இம்மாத இறுதியில் சேலத்தில் நடக்க உள்ள மாநில தடகள போட்டியில் பங்கேற்பர்’ என்றார்.

Advertisement