கைவினை பொருட்கள் கண்காட்சி 10 சதவீத தள்ளுபடியில் விற்பனை

ஓசூர்; சேலத்திலுள்ள, தமிழ்நாடு கைத்தறி தொழில்கள் வளர்ச்சி கழகம் (பூம்புகார்) சார்பில், கைவினை கலைஞர்களுக்கு சந்தை வாய்ப்பை உருவாக்கும் வகையில், நேரடி விற்பனை மற்றும் கண்காட்சி, ஓசூர் பிருந்தாவன் நகரில் உள்ள லட்சுமி சினிமாஸ் தியேட்டர் அருகே, நேற்று மாலை துவங்கியது.

ஓசூர் சப்-கலெக்டர் ஆக்ரிதி சேத்தி துவக்கி வைத்தார். அடுத்த மாதம், 7ம் தேதி வரை தினமும் காலை, 10:00 முதல், இரவு, 8:00 மணி வரை, விற்பனை மற்றும் கண்காட்சி நடக்கிறது. இதில், கைவினை கலை பொருட்கள், கைத்தறி துணி வகைகள், அலங்கார நகைகள், சுவாமி மலை பஞ்சலோக சிலைகள், பித்தளை குத்துவிளக்கு, தஞ்சாவூர் கலை தட்டு, ஓவியங்கள், சந்தன மர சிற்பங்கள், சந்தன கட்டை, காகித கூழ் பொம்மை மற்றும் சுடிதார், பேன்சி ஆடைகள் உட்பட பல்வேறு பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
முத்து, பவளம், நவரத்தின மாலை, ராசிகற்கள், படிக மணிமாலை, ருத்ராட்சம், கருங்காலி மாலை, பஞ்சலோக நகைகள் போன்றவை உள்ளன. 50 ரூபாய் முதல், 10.25 லட்சம் ரூபாய் வரை மதிப்பிலான பொருட்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. 10 லட்சம் ரூபாய் வரை, விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து பொருட்களுக்கும், 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுவதாக, சேலம் பூம்புகார் மேலாளர் நரேந்திர போஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement