சவுதியின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் உறுதுணையாக நிற்கிறோம்: ஹவுதி தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்

1

புதுடில்லி: சவுதி அரேபியாவின் விமான நிலையம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். இந்த தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டதாகவும், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை சவுதி அரேபியாவின் விமான போக்குவரத்து கழகமும் உறுதிப்படுத்தி உள்ளது.




இந்த தாக்குதல் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த சில நாட்களாக ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தொடர்ச்சியான கோழைத்தனமான தாக்குதலை—நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்; இத்தாக்குதல்கள் உயிரிழப்புகள், காயங்கள் மற்றும் சொத்துச் சேதங்களுக்கு வழிவகுத்துள்ளன.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கிறோம்; பொதுமக்களுக்கான உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் இத்தகைய தொடர்ச்சியான தாக்குதல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை; அவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

சவுதி அரேபியாவின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் அந்நாட்டு மக்களுடனும் அரசுடனும் நாங்கள் உறுதுணையாக நிற்கிறோம்; இப்பகுதியில் அமைதியும், இயல்புநிலையும் விரைவில் திரும்ப வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement