ஓடும் லாரியில் தீ விபத்து உயிர் தப்பிய டிரைவர்

உத்தனப்பள்ளி: ஓசூர் அருகே, ஓடும் லாரியில் தீ விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பினார்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் இருந்து, கர்நாடகாவின் பெங்களூருவுக்கு, முருங்கைக்காய் லோடு ஏற்றி கொண்டு, நேற்று லாரி சென்றது. தர்மபுரி மாவட்டம், ஜிட்டாண்டஹள்ளியை சேர்ந்த அரவிந்தன், 26, என்பவர் லாரியை ஓட்டி சென்றார். தர்மபுரி - நெரலுார் புதிய தேசிய நெடுஞ்சாலையில், ஓசூர் அடுத்த பீர்ஜேப்பள்ளி அருகே நேற்று மதியம், 2:30 மணிக்கு சென்ற போது, லாரியின் முன்பகுதியில் கரும்புகை வெளியேறியது. அதனால், சாலையோரம் லாரியை நிறுத்தி விட்டு, டிரைவர் அரவிந்தன் கீழே இறங்கினார். திடீரென லாரியின் கேபின் பகுதி தீப்பிடித்து எரிய துவங்கியது.இதை பார்த்த பொதுமக்கள், அவ்வழியாக வந்த சிமென்ட் கான்கிரீட் கலவை இயந்திர வாகனத்திலிருந்த தண்ணீரை எடுத்து ஊற்றி தீயை அணைத்தனர். ஆனால், கேபின் பகுதி முழுவதும் எரிந்து நாசமானது. முருங்கைக்காய் லோடு எரியாமல் தப்பியது. டிரைவர் அரவிந்தன் காயமின்றி உயிர் தப்பினார். உத்தனப்பள்ளி போலீசார் வழக்கு பதிந்து, மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதாவது காரணமா என, விசாரிக்கின்றனர்.

Advertisement