போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் வேலையை இனி ரோபோ செய்யும்!

3

-நமது சிறப்பு நிருபர்-

நெரிசல் மிகுந்த சந்திப்புகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் வேலையை இனி ஏஐ தொழில்நுட்பம் கொண்ட ரோபோக்கள் செய்யும்; நாட்டில் முதல்முறையாக இந்த திட்டம் கொச்சி மாநகரில் அமல் செய்யப்பட உள்ளது.

சுட்டெரிக்கும் வெயிலிலும் சோர்வடையாத ஒரு போக்குவரத்து போலீசையோ, அல்லது மனிதத் தலையீடு இன்றி நாட்கணக்கில் நகர வீதிகளில் ரோந்து செல்லும் ஒரு தானியங்கி வாகனத்தை கற்பனை செய்து பாருங்கள்.

ஆள் பற்றாக்குறையை சரி செய்து, பாதுகாப்பு பணியை வலுப்படுத்தும் நோக்கில், கேரள போலீசார் ஏஐ மனித ரோபோ மற்றும் தானியங்கி இயந்திரங்களை பயன்படுத்தி இவ்விரண்டையும் களத்திற்கு கொண்டு வர தயாராகி வருகிறது.

கொச்சியில் அதி நவீன தொழில்நுட்பத்தை கேரள போலீசார் பயன்படுத்த இருக்கின்றனர். கொச்சியில் நடந்த சைபர் பாதுகாப்பு மாநாட்டின் போது, இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா வெளியிட்டார்.

கொச்சியைச் சேர்ந்த 'ஐ ஹப் ரோபோடிக்ஸ்' (I Hub Robotics) என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்துடன் கேரள போலீசார் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு இருக்கிறது. வானிலை மற்றும் நீண்ட நேரப் பணியால் போக்குவரத்து போலீசார்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான சிரமங்களைக் குறைக்க இந்த ஏஐ அடிப்படையிலான ரோபோ போக்குவரத்து மேலாண்மையில் சோதனை முறையில் பயன்படுத்தப்படும்.

பேரிடர் மேலாண்மை, அவசரகால மீட்புப் பணிகள், ரோந்து மற்றும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக 6 சக்கரங்கள் கொண்ட இந்த அதிநவீன தற்காப்பு தரை வாகனம் பயன்படுத்தப்படும். ஐ ஹப் ரோபோடிக்ஸ் நிறுவனம் எடப்பள்ளியில் இருந்து செயல்படுகிறது, இதன் உற்பத்தி ஆலைகள் களமசேரியில் அமைந்துள்ளன. ஆரம்பகட்ட சோதனைகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வளர்ந்து வரும் சைபர் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் போலீஸ் துறையின் சைபர் பாதுகாப்பு மையமான சைபர்டோம் மேலும் பலப்படுத்தப்படும். விபத்துகள் அதிகம் நடக்கும் பகுதிகளைக் கண்டறியும் 'ஏஐ ட்ராக்' மற்றும் இணையவழி மோசடிகளிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் 'சைபர் வால்' போன்ற ஏஐ செயலிகளும் நடைமுறைக்கு வரவுள்ளன என தகவல் தெரிவிக்கின்றன.

Advertisement