ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்ட நகராட்சி ஊழியர் மீது வழக்கு
புதுச்சேரி: புதுச்சேரியில் வர்த்தக உரிமம் வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக, புதுச்சேரி நகராட்சி வருவாய் அதிகாரி–II அலுவலகத்தில் பணியாற்றும் பில் கலெக்டர் அலெக்சாண்டர் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
கோவையை தலைமையிடமாகக் கொண்ட லட்சுமி கிருஷ்ணா நேச்சுரல்ஸ் காஸ்மெட்டிக்ஸ் நிறுவனத்தின் புதுச்சேரி கிளைக்கு வர்த்தக உரிமம் பெற, அந்நிறுவன மேலாளர் ரஞ்சித், கடந்த மார்ச் 4ம் தேதி நகராட்சியில் விண்ணப்பித்தார்.
வர்த்தக உரிமம் வழங்குவதற்கு பில் கலெக்டர் அலெக்சாண்டர், ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சத் தொகையை முதலில் கொடுத்தால் மட்டுமே, நகராட்சிக்கு மூன்று ஆண்டுகளுக்கான உரிம கட்டணமாக செலுத்த வேண்டிய ரூ.15 ஆயிரத்தை செலுத்த முடியும் என, தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, கடந்த செப்டம்பர் 7ம் தேதி நகராட்சி அலுவலகத்தில் பில் கலெக்டர் அலெக்சாண்டர் உடன் நடைபெற்ற உரையாடலை, ரஞ்சித் தனது மொபைல் போனில் வீடியோ மற்றும் ஆடியோவாக பதிவு செய்துள்ளார்.
அந்த பதிவுகள் அடங்கிய டிவிடி மற்றும் வர்த்தக உரிம விண்ணப்பத்தின் நகலை சேர்த்து புதுச்சேரி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து, புதுச்சேரி லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார், அலெக்சாண்டர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, அவரை தேடி வருகின்றனர்.