புரட்டாசி மஹாளய அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம்

நாமக்கல்:புரட்டாசி மஹாளய அமாவாசையையொட்டி, நேற்று நாமக்கல் மாவட்ட நீர் நிலைகளில் குவிந்த பொதுமக்கள், தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

தை, ஆடி, புரட்டாசி மாதங்களில் வரும், அமாவாசை முக்கியத்துவம் வாய்ந்தது. இந்நாளில், இறந்த தங்களது முன்னோர்களான பித்ருக்களை நினைத்து, நீர்நிலைகளுக்கு சென்று, பொதுமக்கள் தர்ப்பணம் செய்து வழிபடுவர். 'பட்சம்' என்றால், 15 நாட்கள், மறைந்த நம் முன்னோர், பித்ரு லோகத்திலிருந்து, 15 நாட்கள் நம்மோடு தங்கும் காலமே, 'மஹாளய பட்சம்' ஆகும். புரட்டாசி மஹாளய அமாவாசையான, நேற்று ஆறு, கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில், பக்தர்கள் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
நாமக்கல் மாவட்டம், மோகனுார் அசலதீபேஸ்வரர் கோவில் படித்துறையில், ஏராளமான பொதுமக்கள், தங்களது இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். நேற்று அதிகாலை முதலே, குடும்பத்துடன் காவிரி ஆற்றுக்கு வந்த பக்தர்கள், புனித நீராடி வாழை இலையில் வெற்றிலை, பாக்கு, தேங்காய் பழம், பச்சரிசி, காய்கறி, கீரைகள், மளிகை பொருட்கள் உள்ளிட்டவை வைத்து, குடும்பத்தில் இறந்த முன்னோர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அரிசி மாவில் உருண்டை செய்து, காவிரி ஆற்றில் விட்டு வழிபட்டனர்.
அதில், நாமக்கல், சேலம், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

Advertisement