பாலியஸ்டர் நுால் வியாபாரிகள் பிரத்யேக சங்கம் துவக்கம்
திருப்பூர்: தேவையான வர்த்தகத் தகவல்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலம், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அபாயங்களைத் தவிர்க்கலாம் என, திருப்பூர் பாலியஸ்டர் நுால் வியாபாரிகள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.
திருப்பூர் பாலியஸ்டர் நுால் வியாபாரிகளின் நலன் மற்றும் வர்த்தகப் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு இச்சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. சங்கத்தின் முதல் கூட்டம், காந்திநகர் விக்னேஷ் டெக்ஸ் வளாகத்தில் நடைபெற்றது.
பாலியஸ்டர் நுால் வர்த்தகத்தில் நிலவும் பல்வேறு சவால்கள் மற்றும் நடைமுறைப் பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக, புதிய மற்றும் அறிமுகம் இல்லாத வாடிக்கையாளர்களுக்கு கடனில் நுால் விற்பனை செய்வது, பணம் செலுத்துவதில் ஏற்படும் தாமதம், வர்த்தகத்தில் எதிர்கொள்ள வேண்டிய எதிர்பாராத அபாயங்கள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.
வியாபாரிகளிடையே தேவையான தகவல்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலம், வர்த்தக அபாயங்களை முன்கூட்டியே அறிந்து, பாதுகாப்பான மற்றும் தெளிவான முடிவுகளை எடுக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து ஆலோசனைக் கூட்டங்களை நடத்துவதுடன், துறை சார்ந்த பிற வர்த்தகர் சங்கங்களுடன் இணைந்து செயல்பாடுகளை விரிவுபடுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.
நிர்வாகக் குழுப் பொறுப்பாளர்கள் சண்முகசுந்தரம், ரவி, கண்ணன், விஜயகுமார், சந்தோஷ், முத்து, சோனு, கவுசிக், சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.