நீர்பாசன திட்டங்களை நிறைவேற்ற விவசாயிகள் கலந்தாய்வு கூட்டம்
பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள புலிகரை கிராமத்தில், புலிகரை ஏரி உட்பட பல்வேறு நீர்பாசன திட்டங்களை நிறைவேற்றக்கோரி, விவசாயிகள் கலந்தாய்வு பொதுக்கூட்டம், புலிக்கரை நீர்ப்பாசன திட்ட விவசாயிகள் குழு தலைவர் கந்தசாமி தலைமையில் நேற்று நடந்தது. இதில், புலிக்கரை கால்வாய் பாசன திட்டம், 6 ஆண்டுகளாகியும் முடிவடையாமல் இருப்பதால், அதை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற அரசு வழிவகை செய்ய வேண்டும். பாலக்கோடு முதல் தர்மபுரி வரை பயன்பாட்டில் உள்ள கால்வாயை அகலப்படுத்தி, அனைத்து ஏரிகளுக்கும் நீர் நிரம்ப வழிவகை செய்ய வேண்டும். 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டு இன்று வரை முழுமை பெறாத அலியாளம் துாள்செட்டி ஏரி நீர் பாசன திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
மேலும் காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.இதில், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சின்னசாமி நிருபர்களிடம் கூறியதாவது:
மாவட்டத்திலுள்ள, 512 ஏரிகள், 9 பெரிய அணைகள் என வறண்டுள்ளதால் குடிநீர் பஞ்சம் நிலவி வருகிறது. தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் புலிகரை கிராமத்தில் நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்றகோரி விவசாயிகளின் கலந்தாய்வு பொதுகூட்டம் நடத்தப்பட்டது. இதில், எண்ணேக்கொள்புதுார் கால்வாய் திட்டம், அலியாளம் அணைக்கட்டு திட்டம், உப்புபள்ளம் தடுப்பணை திட்டம், தொல்லேகாது தடுப்பணை திட்டம் உள்ளிட்ட திட்டங்களை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அப்படி நிறைவேற்றாத பட்சத்தில் இப்பகுதியிலுள்ள விவசாயிகளை ஒன்று திரட்டி, தேசிய நெடுஞ்சாலையை முடக்கும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.