வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கும் கோரிக்கைக்கு புதிய கட்டுப்பாடுகள்! வழிகாட்டுதல்களை வெளியிட்டது தேர்தல் கமிஷன்

புதுடில்லி: வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள அல்லது புதிதாக சேர்க்கப்படவுள்ள பெயர்களை நீக்கக் கோரி, தனிநபர்கள் படிவம் - 7 விண்ணப்பங்களை தாக்கல் செய்வதற்கு தேர்தல் கமிஷன் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

நாடு முழுதும் எஸ்.ஐ.ஆர்., எனப்படும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடந்து வருகிறது. தேர்தல் கமிஷனின் இந்நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதில், முறைகேடுகள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பதாக தேர்தல் கமிஷன் பதிலடி கொடுத்து வருகிறது.

பணிச்சுமை



இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள அல்லது புதிதாக சேர்க்கப்படவுள்ள பெயர்களை நீக்கக் கோரி, தனிநபர்கள், படிவம் - 7க்கான விண்ணப்பங்களை தாக்கல் செய்வதற்கு தேர்தல் கமிஷன் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களை நீக்கக் கோரி, ஆதாரமற்ற புகார்கள் அளிக்கப்படுவதால், உண்மையான வாக்காளர்கள் பாதிக்கப்படுவதுடன், தேர்தல் அதிகாரிகளின் பணிச்சுமையும் அதிகரிக்கிறது. இதை தடுக்கும் நோக்கத்தில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு புதிய வழிகாட்டுதல்களை தேர்தல் கமிஷன் அனுப்பியுள்ளது.

தேர்தல் கமிஷன் சார்பில் துணை செயலர் சந்தீப் குமார் அனுப்பியுள்ள அந்த வழிகாட்டுதல்களில் கூறப்பட்டிருப்பதாவது:

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்புக்கான உரிமை கோரல்கள் மற்றும் ஆட்சேபனைகள் பெறப்படும் காலத்தில், தனிப்பட்ட நபர், அதிகபட்சம் படிவம் - 7 விண்ணப்பங்களை 10 முறை விண்ணப்பிக்கலாம். வழக்கமாக நடக்கும் வாக்காளர் பட்டியல் திருத்த பணியின்போது, மாதத்திற்கு ஐந்து விண்ணப்பங்கள் மட்டுமே தாக்கல் செய்ய அனுமதிக்கலாம்.

இந்த புதிய கட்டுப்பாடுகள், 'ஆன்லைன்' எனப்படும், இணையவழி மற்றும் நேரடி விண்ணப்ப தாக்கலுக்கும் பொருந்தும். 1960ல் கொண்டு வரப்பட்ட வாக்காளர் பதிவு விதிகளின்படி, சம்பந்தப்பட்ட தொகுதியின் வாக்காளர் பட்டியலில், ஏற்கனவே இடம் பெற்றுள்ளவர்கள் மட்டுமே படிவம் - 7 வாயிலாக விண்ணப்பிக்க முடியும்.

ஒவ்வொரு விண்ணப்பத்தையும் வாக்காளர் பதிவு அதிகாரி ஆய்வு செய்ய வேண்டும்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியின்போது, அரசியல்கட்சிகளின் ஓட்டுச்சாவடி நிலை முகவர்கள், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாவதற்கு முன், நாளொன்றுக்கு, 50 விண்ணப்பங்களும், அதன் பின், நாளொன்றுக்கு, 10 விண்ணப்பங்களும் அளிக்கலாம்.

அசல் கையெழுத்து



ஒவ்வொரு விண்ணப்பத்திலும், முழு விபரங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். புகார் தெரிவிப்பவரின் அசல் கையெழுத்து கட்டாயம். விண்ணப்பதாரரின் விபரங்களை வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிட்டு, விண்ணப்பத்தின் உண்மைத்தன்மையை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விதிகளின்படி சமர்ப்பிக்கப்படாத விண்ணப்பங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் நிராகரிக்க வேண்டும் என தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது. பெயர் நீக்கக் கோரும் ஆட்சேபனை குறித்து இறுதி முடிவு எடுக்கும் முன், புகார்தாரரிடம், வாக்காளர் பதிவு அதிகாரி நேரில் விசாரணை நடத்த வேண்டும்.

புகார் பொய்யானது என தெரியவந்தால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1950, பிரிவு 31ன் கீழ் கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும் தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

இந்த புதிய வழிகாட்டுதல்களை மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள தேர்தல் அதிகாரிகள் உடனடியாக அமல்படுத்துவதுடன், இது தொடர்பான விழிப்புணர்வையும் மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement