பள்ளி வழிப்பாதைக்கு பேச்சுவார்த்தை தோல்வி பெற்றோர் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு

ராயக்கோட்டை: ராயக்கோட்டையில், அரசு பள்ளிக்கு வழிப்பாதை பிரச்னையில் மாணவர்களின் பெற்றோர் மற்றும் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், அதிகாரிகளை கண்டித்து நாளை பெற்றோர் உண்ணாவிரத ‍போராட்டத்தில், ஈடுபட உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட் டம், கெலமங்கலம் ஒன்றியம், தொட்டமெட்டரையிலுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 84 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இங்குள்ள அங்கன்வாடி மையத்தில், 25 குழந்தைகளும் ஆரம்ப கல்வி கற்கின்றனர். கடந்த, 2019ல், தர்மபுரி அதியமான்கோட்டை முதல், கர்நாடகா மாநிலம், நெரலுார் வரை, 4 வழி தேசிய நெடுஞ்சாலை அமைக்க, இப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்தை அகற்ற முடிவு செய்யப்பட்டது. அதனால், தொட்டமெய்யப்பன் திம்மராயசுவாமி கோவில் மானிய நிலத்தில், பள்ளி கட்டடம் மற்றும் அங்கன்வாடி மையம் அமைக்க, 50 சென்ட் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில், 74 லட்சம் ரூபாயில் துவக்கப்பள்ளியும், 17.25 லட்சம் ரூபாயில், அங்கன்வாடி மையமும் கட்டப்பட உள்ளது. கட்டுமான பணிக்கு இடையூறாக, புதிய பள்ளிக்காக ஒதுக்கிய இடத்திற்கு செல்லும் வழிப்பாதையை, தனிநபர் பட்டா நிலம் எனக்கூறி வேலி போட்டு அடைத்தார்.
ஆத்திரமடைந்த பெற்றோர் கடந்த ஜன., மாதம், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு வாரத்தில் வழிப்பாதை ஏற்படுத்தி தருவதாக கூறினர். மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் கடந்த நவ.,ல் வழிப்பாதை அமைக்க நிலம் எடுக்க முன்மொழிவு அனுப்ப உத்தரவிட்டார். ஆனால், வருவாய்த்துறை அலுவலர் ஒருவரது குடும்பத்தினருக்கு சொந்தமான நிலம் என்பதால், அதை கையகப்படுத்த மனமில்லாமல், சப்-கலெக்டருக்கு இதுவரை முன்மொழிவு அனுப்பவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மாணவ, மாணவியரின் பெற்றோர், ராயக்கோட்டை பஸ் ஸ்டாண்டில் நாளை (அக்.12) காலை, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல், உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளனர்.
அவர்களிடம் தேன்கனிக்கோட்டை தாசில்தார் சண்முகம், கெலமங்கலம் பி.டி.ஓ., ராஜேஷ் ஆகியோர், தொட்டமெட்டறை அரசு பள்ளியில் நேற்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அப்போது, முன்மொழிவு அனுப்பும் வரை போராட்டம் நடக்கும் என பெற்றோர் கூறிச்சென்றனர்.

Advertisement