த.வெ.க., நிர்வாகி பெயரை கூறி லாட்டரி விற்ற 2 பேருக்கு 'காப்பு'
ராசிபுரம்:ராசிபுரம் அருகே, த.வெ.க., நிர்வாகி பெயரை கூறி வாடகை வீட்டில் லாட்டரி விற்ற, இருவரை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல்
மாவட்டம், ராசிபுரம் அருகே ஆண்டகளூர்கேட் பகுதியில் வாடகைக்கு வீடு
எடுத்து, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு
விற்கப்படுவதாக, ராசிபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் சோதனையில், லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட ஆண்டகளூர்கேட்
பகுதியை சேர்ந்த சுரேஷ், 45, அவருக்கு உடந்தையாக செயல்பட்ட
பச்சுடையாம்பாளையம் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார், 45, ஆகிய
இருவரை, நேற்று முன்தினம் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி,
சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
விசாரணையில், ஆண்டகளூர் கேட்
பகுதியில் லாட்டரி விற்ற நபர்கள், 'தங்களை, த.வெ.க., மாவட்ட இளைஞரணி
செயலாளர் பிரபுவின் உறவினர்கள் மற்றும் சகோதரர்கள்' எனக்கூறி
லாட்டரி விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், இதேபோல்
ராசிபுரம் நகர் பகுதியில், த.வெ.க., நிர்வாகிகள் பெயர்களை
பயன்படுத்தி லாட்டரி விற்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.
அதன்படி, ராசிபுரம் நகர் முழுவதும் போலீசார், நேற்று தீவிர சோதனை
நடத்தினர்.