யு.பி.ஐ., கட்டண விதிப்பிற்கு எதிர்ப்பு வணிகர் சங்கம் போராட்டம் அறிவிப்பு

நாமக்கல்:'யு.பி.ஐ., பரிவர்த்தனை கட்டணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாமக்கல் மாவட்டத்தில், நாளை வணிகர்கள் அனைவரும், 'கருப்பு பேட்ஜ்' அணிந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்' என, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின், நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
ஏற்கனவே, 'ஜி.எஸ்.டி., எனும் வலையில் சிக்கி போராடிக்கொண்டிருக்கும் சிறு, குறு வணிகர்களிடம், எளிமையாக வணிகம் செய்யுங்கள்' என சொல்லி, யு.பி.ஐ., அறிமுகம் செய்யப்பட்டது. தொடக்கத்தில் இலவசம் எனக்கூறி பழக்கப்படுத்திவிட்டு, தற்போது, 'நாளை முதல், யு.பி.ஐ., பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.
இந்த கட்டண விதிப்பால், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயரும். இந்த கட்டண விதிப்பு சிறு, குறு வணிகர்களையும், நுகர்வோரையும் நேரடியாக பாதிக்கும் என்பதோடு, 'டிஜிட்டல் இந்தியா' எனும் முழக்கத்திற்கு எதிரானது. எனவே, மத்திய அரசு இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, நாளை அனைத்து வணிக நிறுவனங்களிலும், வணிகர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து, அமைதியான முறையில் எதிர்ப்பை தெரிவிப்பர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement