நுால் மில்லில் பெண் கொலை சட்டீஸ்கர் வாலிபருக்கு 'ஆயுள்'

ப.வேலுார்:நுால் மில்லில், பெண் தொழிலாளியை கொலை செய்த வழக்கில், சட்டீஸ்கர் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து, நாமக்கல் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் திக்ராம் மகன் ரூபேஷ் குமார், 21; இவர், கடந்த, 2021ல், நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே உள்ள ஒரு தனியார் நுால் மில்லின் தங்கும் விடுதியில் தங்கி பணியாற்றி வந்தார். அதே மில்லில் பணிபுரிந்த, சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த துளசி பரத்வாஜ், 20, என்ற இளம்பெண்ணுக்கும், ரூபேஷ் குமாருக்கும் இடையே, கடந்த, 2021 டிச., 25ல், தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரூபேஷ் குமார், கத்தியால் துளசி பரத்வாஜை சரமாரியாக குத்தி கொலை செய்தார்.
இதுகுறித்து, பரமத்தி இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். மேலும், இந்த வழக்கு நாமக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
விசாரணை முடிந்த நிலையில், ரூபேஷ் குமார் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, மகிளா நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து, ரூபேஷ் குமாரை கைது செய்த பரமத்தி போலீசார், சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Advertisement