அரசு பள்ளி மாணவர்களிடம் ரூ.50 கோடி வினாத்தாள் கட்டண முறைகேடு: லஞ்ச ஒழிப்பு துறைக்கு மனு

- நமது நிருபர் -:

'ஆண்டுதோறும் அரசு பள்ளி மாணவர்களிடமிருந்து, வினாத்தாள் கட்டண வசூலில், 50 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடக்கிறது' என, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் மலைக்கொழுந்தன், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் பிரேம் ஆனந்த் சின்ஹாவுக்கு புகார் அனுப்பியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், 6 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களிடம் 'வினாத்தாள் கட்டணம்' என்ற பெயரில் பணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இக்கட்டணத்தை வசூலிக்க, எவ்வித அரசாணையும் பிறப்பிக்கப்படவில்லை என, செப்.,8ல், தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது. மேலும் மாவட்டம் தோறும் உள்ள, முதன்மை கல்வி அலுவலர்களிடமிருந்து, வினாத்தாள் கட்டணம் தொடர்பாக முரண்பாடான பதில்கள் வந்துள்ளன.

இதில், 2025-26ம் ஆண்டு கல்வியாண்டில், 6, 7ம் -வகுப்புகளுக்கு வினாத்தாள் கட்டணம் கரூரில், 80 ரூபாய்; நாமக்கல்லில், 75 ரூபாய்; திருவள்ளூரில், 84 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. 8-ம் வகுப்புக்கு கரூரில், 80 ரூபாய்; நாமக்கல்லில், 85 ரூபாய்; திருவள்ளூரில், 84 ரூபாய்; 9ம் வகுப்புக்கு கரூர், நாமக்கல்லில் தலா, 100 ரூபாய், திருவள்ளூரில், 90 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

பத்தாம் வகுப்புக்கு கரூரில், 100 ரூபாய், நாமக்கல்லில், 122 ரூபாய், திருவள்ளூரில், 105 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. பிளஸ் 2க்கு கரூரில், 120 ரூபாய், நாமக்கல்லில், 122, திருவள்ளூரில், 119 ரூபாய் என ஒவ்வொரு மாவட்டத்திற்கு வெவ்வேறு கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.

கடந்த, 2025-26 கல்வியாண்டில் பெறப்பட்ட தகவல்படி, நாமக்கல் மாவட்டத்தில், 1.27 கோடி ரூபாய், கன்னியாகுமரியில், 1.37 கோடி ரூபாய், புதுக்கோட்டையில், 1.4 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு மாவட்டத்திற்கு சராசரியாக, 1.25 கோடி ரூபாய் என்றால், 38 மாவட்டங்களில், 50 கோடி ரூபாய்க்கு மேல் எவ்வித அரசாணையுமின்றி மாணவர்களிடமிருந்து ஆண்டுதோறும் பெறப்பட்டுள்ளது.

இத்தொகையை, தனி நபர்களின் வங்கி கணக்குகளில் டிபாசிட் செய்து, கையாளுகின்றனர். வினாத்தாள் அச்சிடும் பணிக்கு, எவ்வித பொது டெண்டரும் கோரப்படுவதில்லை. குறிப்பிட்ட சில அச்சகங்களுக்கு தன்னிச்சையாக ஒப்பந்தம் வழங்கப்படுகிறது.

மாணவர்களிடம் தேர்வுக்காக வசூலிக்கப்படும் தொகையிலிருந்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் வாகன பழுது பார்ப்பு செலவு உள்பட பலவற்றிற்கு முறைகேடாக செலவிடப்பட்டுள்ளது, கள ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில், சட்டவிரோத வசூல், நிதி முறைகேடு நடந்துள்ளதாக தெரிவதால், விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement