கால் முறிவால் வலி தாங்க முடியாமல் விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை
நாமகிரிப்பேட்டை:நாமகிரிப்பேட்டை
அருகே, ஈஸ்வரமூர்த்திபாளையம், வடக்குக்காடு பகுதியை சேர்ந்தவர்
பெரியசாமி மனைவி புவனேஸ்வரி, 70. இவர் கடந்த, ஒரு மாதத்திற்கு முன்,
விவசாய தோட்டத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது
நிலைதடுமாறி எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தார். இதில் அவருக்கு
காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதையடுத்து குடும்பத்தினர் அவரை
மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக
சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சிகிச்சை முடிந்து கடந்த, 7ல் வீட்டிற்கு அழைத்து
வரப்பட்டார்.
வீட்டில் இருந்த புவனேஸ்வரிக்கு காலில் கடும் வலி
ஏற்பட்டதால், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்
மனமுடைந்து வயலுக்கு பயன்படுத்தப்படும் களைக்கொல்லி மருந்தை
குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள், அவரை மீட்டு மருத்துவமனைக்கு
கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து மங்களபுரம்
போலீசார் விசாரிக்கின்றனர்.