டில்லியில் தடையற்ற இணைய சேவை, மக்கள் நடமாட்டத்தை உறுதி செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடில்லி: டில்லியில் தடையற்ற இணைய சேவை, மக்கள் நடமாட்டத்தை உறுதி செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

டில்லியில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டத்தை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டனர். மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன. முக்கிய சாலைகளில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டன.

இணையதள சேவை முடக்கப்பட்டன. மெட்ரோ ரயில் நிலையங்களை மக்கள் பாதிக்காத வகையில் திறக்க வேண்டும் என சுப்ரீம்கோர்ட் அறிவுறுத்தி இருந்தது. ஆனால், போராட்டக்காரர்கள் தடையை மீறி வந்ததால், சுப்ரீம்கோரட் உத்தரவை டில்லி அரசு நிறைவேற்றவில்லை.

இதனை எதிர்த்து, சுப்ரீம்கோர்ட் வழக்கறிஞர் சைலேந்திர மணி திரிபாதி அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று (அக் 11) சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்ஷி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

​​மனுதாரர்களில் ஒருவருக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டதாவது: டில்லியில் மெட்ரோ ரயில்களில் பயணித்தவர்களையும் கைது செய்துள்ளனர். நேற்று டில்லி முழுவதும் ஒடுக்குமுறை நிலவியது; போராடும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. மக்களின் போராடும் உரிமையை நிலைநாட்ட நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு பின்வருமாறு:

* டில்லியில் அமைதியான முறையில் கூடுபவர்களுக்கு எதிராக எந்தவொரு சட்டவிரோத கைது நடவடிக்கையும் எடுக்க கூடாது.

* டில்லியில் சட்டம்-ஒழுங்கு தொடர்பான சூழல் ஏதும் எழாதவரை மெட்ரோ ரயில் சேவை இயல்பு நிலையில் செயல்பட வேண்டும்.

* டில்லியில் தடையற்ற இணைய சேவை, மக்கள் நடமாட்டத்தை உறுதி செய்ய வேண்டும்.

* இந்த சம்பவம் குறித்து மத்திய அரசு விரிவான பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டது.

Advertisement