3,750 கிலோ தரமற்ற மசாலா பொருள் கிரேட்டர் நொய்டாவில் பறிமுதல்

நொய்டா: உணவுப் பொருள் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை அதிகாரிகள் கிரேட்டர் நொய்டாவில் நடத்திய அதிரடி சோதனையில், 3,759 கிலோ தரமற்ற மசாலா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

உத்தர பிரதேச மாநிலம் கவுதம் புத்தா நகர் மாவட்ட கலெக்டர் உத்தரவுப்படி, உணவுப் பொருள் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை அதிகாரிகள், கிரேட்டர் நொய்டாவில் உணவுப் பொருள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

பிஸ்ராக் அருகே இடஹேரா கிராமத்தில், ‘தர்மேஷ் இண்டஸ்ட்ரீஸ்’ என்ற உணவுப் பொருள் தொழிற்சாலையில், தரமற்ற 525 கிலோ மிளகாய் தூள், 1,050 கிலோ மஞ்சள் தூள், 315 கிலோ மல்லித் தூள், 125 கிலோ மிளகாய் விதை, 360 கிலோ மல்லி விதை, 140 கிலோ கலப்பட மஞ்சள், 600 கிலோ மல்லி உமி, 100 கிலோ சோயா நக்கெட்ஸ், 300 கிலோ மிளகாய் வத்தல், 60 கிலோ கடுகு எண்ணெய், நான்கு கிலோ நிறமூட்டிகள் உட்பட 1,350 கிலோ தரமற்ற மசாலா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து, உணவுப் பொருள் பாதுகாப்பு துறை உதவி ஆணையர் சர்வேஷ் மிஸ்ரா கூறியதாவது:

பறிமுதல் செய்யப்பட்ட தரமற்ற மசாலா பொருட்களின் மாதிரிகள் ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தொழிற்சாலை உரிமையாளர்கள் மீது பிஸ்ராக் போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொழிற்சாலையின் உரிமத்தை ரத்து செய்வதற்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

நவராத்திரி விழா நேற்று துவங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து பண்டிகைகள் கொண்டாடப்படவுள்ள நேரத்தில், மக்களுக்கு தரமான உணவுப் பொருட்கள் மற்றும் பானங்கள் கிடைப்பதை உறுதி செய்ய இதுபோன்ற அதிரடி சோதனைகள் தொடர்ந்து நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement