10 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத சவேரியார்பட்டினம் ரோடு: மக்கள் அவதி
ஆர்.எஸ்.மங்கலம்: சவேரியார் பட்டினம், புல்லமடை வழியாக, ஆர்.எஸ்.மங்கலம் செல்லும் ரோடு 10 ஆண்டுகளுக்கு மேலாக சீரமைக்கபடாமல் உள்ளதால் வாகனஓட்டிகள், மக்கள் சிரமப்படுகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலை, சவேரியார் பட்டினம் விலக்கிலிருந்து சவேரியார் பட்டினம், புல்லமடை வழியாக, ஆர்.எஸ்.மங்கலம் செல்வதற்கு ரோடு வசதி உள்ளது. இந்த ரோட்டின் மூலம், அப்பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயனடைந்து வருகின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ரோடு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைக்கப்படாத நிலையில் உள்ளது. ரோட்டில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து ரோடு குண்டும், குழியுமாக உள்ளதால், லேசான மழை பெய்தாலே ரோட்டில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி பள்ளங்கள் தெரியாத வகையில் உள்ளன. இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளங்கள் தெரியாமல் விபத்துகளில் சிக்கிகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சவேரியார் பட்டினம் விலக்கு முதல் புல்லமடை வரை உள்ள 3 கி.மீ., ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.