உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை ஏற்க முடியாது; வெளியுறவுத்துறை அமைச்சகம்
கோல்கட்டா: தேர்தல் ஆணையருக்கு எதிராக டில்லியில் தடையை மீறி போராட்டம் நடத்துபவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். தடுப்பு காவலுக்குப் பிறகு அவர்கள் விடுக்கப்பட்டு வருகின்றனர். டில்லியில் அமைதியாக போராடுபவர்களை விடுவிக்க வேண்டும் என்று ஐநா மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டர்க் கூறினார். இவர் ஏற்கனவே வங்கதேசத்தில் மாணவர்கள் கிளர்ச்சியின் போதும், கருத்து கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இவரது இந்தப் பேச்சுக்கு ஜெனீவாவில் உள்ள இந்திய தூதரகம் கண்டனத்தை பதிவு செய்தது. தற்போது, வெளியுறவுத்துறை அமைச்சக செயலர் ரந்தீர் ஜெய்ஸ்வால், ஐநா மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டர்க்கின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
கோல்கட்டாவில் அவர் பேசியதாவது; இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. இங்கு அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் உரிமை அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. சுதந்திரமான நீதித்துறை மற்றும் ஊடகங்களால் இது பாதுகாக்கப்படுகிறது.
சட்ட அமலாக்க அமைப்புகள் சட்டத்தின்படியே செயல்படுகின்றன. நீதிமன்றங்கள் பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய எப்போதும் தயாராக இருக்கின்றன. ஐநா மனித உரிமை ஆணையரின் கவலைகள் தேவையற்றவை. இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அண்டை நாடுகளில் நடக்கும போராட்டங்களில் நிகழும் ஒடுக்குமுறைகள் குறித்து அவர் கருத்து தெரிவிக்கவில்லை. இதுபோன்ற இரட்டை நிலைப்பாடுகள் அமைப்பின் நம்பகத்தன்மையைக் குலைத்து, பன்முகத்தன்மை மீதான நம்பிக்கையை இழக்கச் செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.