இந்தியாவில் 'ஸ்டார்லிங்க்' வருகையால் அம்பானியின் தொழில் அழிந்து விடாது: கொக்கரிக்கிறார் எலான் மஸ்க்
புதுடில்லி: 'இந்தியாவில், 'ஸ்டார்லிங்க்' செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவை தொடங்குவதால், முகேஷ் அம்பானியின் லாபம் குறையலாமே தவிர, தொழில் அழிந்து விடாது' என, அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் மீண்டும் குற்றஞ்சாட்டி உள்ளார்.
நம் நாட்டில், 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் பிராண்ட்பேண்ட் சேவைக்கு இதுவரை உரிமம் கிடைக்கவில்லை என, அந்நிறுவனத்தின் தலைவரும், உலகப் பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் சமீபத்தில் தெரிவித்தார். ஸ்டாலிங்க் சேவைக்கு அனுமதி தர விடாமல் ரிலையன்ஸ் குழும தலைவரும், ஆசியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவருமான முகேஷ் அம்பானி தடுப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். மேலும், இந்தியாவின் உண்மையான தலைவர், அதாவது, அம்பானி தான் பிரதமர் என்றும் அவர் விமர்சித்தார்.
இந்நிலையில், சமூக வலைதளத்தில் எலான் மஸ்க் வெளியிட்ட பதிவு:
ஒருபுறம், இந்தியாவில் அம்பானியால் வழங்கப்படும் குறைந்த கட்டணங்களுடன் ஸ்டார்லிங்க் ஒருபோதும் போட்டியிட முடியாது என, அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். மறுபுறம், ஸ்டார்லிங்க் மிகக் கடுமையான போட்டியாளராக உருவெடுத்து விடும் என்றும் கூறுகின்றனர். இது, அப்பட்டமான பாசாங்குத்தனம்; மிகைப்படுத்தப்பட்ட வாதம்.
தொலை தொடர்பு சந்தையில் ஆரோக்கியமான போட்டி நிலவுவது, சாமானிய இந்திய மக்களுக்கு பல தேர்வுகளை வழங்கி நன்மை பயக்கும். ஸ்டார்லிங்க் வருகையால் அம்பானியின் லாபம் குறையலாமே தவிர, அவரது தொழில் அழிந்து விடாது. ஒருவேளை, இந்தியாவில் ஸ்டார்லிங் சேவை கட்டணம் அதிகமாக இருந்தால் மக்கள் அதை வாங்க மாட்டார்கள். அப்போது, விலையை குறைத்து மலிவாக்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு தான் ஏற்படும்.
இந்தியாவில் இணைய வசதி இல்லாத குக்கிராமங்கள் மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி வாய்ப்பையும், சிறு வணிகர்களுக்கு உலகளாவிய வர்த்தக வாய்ப்பையும் ஸ்டார்லிங்க் வழங்கும். பேரிடர் காலங்களில் அனைத்து தகவல் தொடர்பு அமைப்புகளும் செயலிழக்கும் போது உயிர்களை காப்பாற்ற செயற்கைக்கோள் இணையம் உதவும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
ஸ்டார்லிங்க் சேவை: என்ன பிரச்னை?
ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் இணைய சேவை இந்தியாவில் நுழைவது வெறும் வணிக போட்டி சார்ந்தது மட்டுமல்ல. அது, நாட்டின் இறையாண்மை, தகவல் பாதுகாப்பு, உள்நாட்டு பாதுகாப்பு சார்ந்த பல ஆழமான சவால்களை உள்ளடக்கியது என, 'தக் ஷஷிலா' கல்வி நிறுவனம் எச்சரித்துள்ளது. இது குறித்து விரிவாக ஆய்வு நடத்திய அந்த கல்வி நிறுவனம், பல்வேறு காரணங்களை முன்வைத்துள்ளது.
* இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில், பாதுகாப்பு படையினரால் ஸ்டார்லிங்க் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தியாவில், ஸ்டார்லிங்க் சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் கூறிய போதும், மியான்மர் எல்லையோரப் பகுதிகளில், 'ஜியோ-பென்சிங்' நுட்பத்தில் உள்ள குறைபாடுகளால் அவை செயல்பட்டிருக்கலாம்.
* அந்தமான் - நிக்கோபார் தீவுகளில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஸ்டார்லிங்க் சாதனங்களை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சாதனங்களை பயன்படுத்திய பயனர்கள் குறித்த விபரங்களையும் ஸ்டார்லிங்க் தரவில்லை.
* ஈரானில், அரசுக்கு எதிரான போராட்டங்களின் போது அந்நாட்டு அரசு முழுமையாக இணைய சேவையை முடக்கிய போதும், சட்டவிரோதமாக கடத்தப்பட்ட, 50,000 ஸ்டார்லிங்க் டெர்மினல்களை ரேடியோ ஜாமர்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை.
* ரஷ்யா உடனான போரில், உக்ரைன் ராணுவத்தின் தகவல் தொடர்புக்கு ஸ்டார்லிங்க் முதுகெலும்பாக இருந்தது. ஆனால், கிரிமியா மீதான தாக்குதலின் போது எலான் மஸ்க் தன்னிச்சையாக இணைய இணைப்பை துண்டித்து ராணுவ நடவடிக்கையை சீர்குலைத்தார். ஒரு நாட்டின் தேசிய பாதுகாப்பு ஒரு தனியார் நிறுவன தலைவரின் மனநிலையை சார்ந்து இயங்குவது ஆபத்தானது.
* அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்துடனும், அந்நாட்டின் ராணுவம் மற்றும் 'நாசா'வுடனும், எலான் மஸ்க் நெருங்கிய பிணைப்பைக் கொண்டுள்ளார். அமெரிக்க தேசிய நலன்களுக்கு முரண்பாடு ஏற்படும் பட்சத்தில், இந்தியாவின் தகவல் தொடர்புகளை முடக்கவோ அல்லது தரவுகளை அமெரிக்காவிடம் பகிரவோ அந்நாட்டு அரசு அவருக்கு அழுத்தம் தர முடியும்
* பேரிடர் அல்லது எல்லை போர் போன்ற நெருக்கடியான சூழ்நிலைகளில் இந்திய ராணுவமும், நிர்வாகமும் இந்த இணைப்பை நம்பியிருக்கும் போது, சேவை தன்னிச்சையாக நிறுத்தப்படலாம். பயங்கரவாதத் தடுப்பு அல்லது கலவர சூழலில் உள்நாட்டு பாதுகாப்பிற்காக இணையத்தை முடக்க நினைத்தால், அரசுக்கு கட்டுப்படாமல் சிக்னல்கள் தொடர்ந்து இயங்கக்கூடும்.
மேலும்
-
உலக மனநல தினத்தை முன்னிட்டுகடலுாரில் விழிப்புணர்வு பேரணி
-
குதிரை, மாட்டு வண்டி பந்தயம்
-
சீமைக்கருவேல மரங்களை அகற்ற மனமில்லை; கிழக்கு கடற்கரை சாலையில் விபத்து அபாயம்: அரசின் உத்தரவை மதிக்காத அதிகாரிகள்
-
மதுரையில் அக்.20ல் தினமலர் நடத்தும்'அ'னா, 'ஆ'வன்னா அரிச்சுவடி ஆரம்பம்: முன்பதிவு செய்யுங்கள்
-
ஆப்ரிக்காவில் கப்பல் கவிழ்ந்து விபத்து; 15 குழந்தைகள் உள்பட 109 பேர் பலி
-
துணை தேர்தல் கமிஷனராக பிரகாஷ் ராஜ்புரோஹித் நியமனம்