பூ வியாபாரியின் குடிசை வீட்டில் வெடித்து சிதறிய ‛காஸ்’ சிலிண்டர்: ரூ.4.50 லட்சம், 8.5 சவரன் நகை, ஆவணங்கள் தீக்கிரை
முகப்பேர்: முகப்பேர் மேற்கு பகுதியில் பூ வியாபாரி சீதா என்பவரின் குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், இரண்டு காஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில், வீட்டில் துாங்கி கொண்டிருந்த அவரது 19 வயது மகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
முகப்பேர் மேற்கு, வள்ளலார் தெருவைச் சேர்ந்தவர் சீதா, 42; பூ வியாபாரி. இவர் தனக்கு சொந்தமான கட்டடத்தின் மேல் தளத்தில் குடிசை அமைத்து, தன் மகன் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார்.
இவரது வீட்டின் கீழ் தளத்தில் துணிக்கடை செயல்பட்டு வருகிறது. நேற்று காலை சீதாவும், அவரது மகனும் நேற்று காலை வெளியே சென்றுவிட, அவரது கல்லுாரியில் படிக்கும் அவரது 19 வயது மகள் வீட்டில் உறங்கி கொண்டிருந்தார்.
அப்போது, சமையலறை அருகே திடீரென கரும்புகை வெளியேறி வீடு தீப்பிடித்து எரிந்தது. உறக்கத்தில் இருந்து விழித்த சீதாவின் மகள், உடனடியாக வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனால், அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
பின், வீடு முழுதும் தீ மளமளவென பரவியது. ஆதீத வெப்பத்தால், சமையலறையில் இருந்த இரண்டு காஸ் சிலிண்டர்கள் அடுத்தடுத்து, பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறின. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த அம்பத்துார் தொழிற்பேட்டை மற்றும் ஜெ.ஜெ.நகர் தீயணைப்பு நிலைய வீரர்கள், ஒன்றரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். அதற்குள் வீட்டில் இருந்த மொத்த பொருட்களும் எரிந்து நாசமாயின. குறிப்பாக மகளின் திருமணத்திற்காக அவர் சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்த 4.50 லட்சம் ரூபாய், 8.5 சவரன் நகைகள், கல்வி சான்றிதழ்கள், முக்கிய ஆவணங்கள், பீரோவுடன் எரிந்து சாம்பலாயின.
மேலும், ‛டிவி, பிரிஜ்’ உள்ளிட்ட வீட்டு உபயோக சாதனங்களும், கீழ் தளத்தில் இருந்த துணிக்கடையின் ‛ஏசி‛ உள்ளிட்டவையும் தீக்கிரையாயின. அனைத்தையும் இழந்து, அக்குடும்பத்தினர் நிர்கதியாக நின்றது சோகத்தை ஏற்படுத்தியது.
விபத்து குறித்து நொளம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
சவுதி அரேபியாவில் நடந்த தாக்குதலில் இந்தியர் பலி... 11 பேர் காயம்; தூதரகம் தகவல்
-
சிறுமி 5 மாதம் கர்ப்பம் :வாலிபர் மீது ' போக்சோ'
-
22 கிலோ கஞ்சா பறிமுதல்: போடியில் இருவர் கைது
-
சூலூர் போலீஸ் ஸ்டேஷனில் இளைஞர் மீது தாக்குதல்தடுத்த இரு போலீசார் காயம்
-
குறிச்சி குளத்துக்கு வந்த வெளிநாட்டு விருந்தினர்கள்!
-
உச்சநீதிமன்றத்தை நோக்கி பேரணி; ராகுல் அறிவிப்பு