குறிச்சி குளத்துக்கு வந்த வெளிநாட்டு விருந்தினர்கள்!

கோவை: எல் நினோ தாக்கம், பறவைகளின் வலசை போதலிலும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. செப். இறுதியில் வெளிநாட்டு பறவைகள், உணவு, இனப்பெருக்கத்துக்காக கோவைக்கு வருவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு ஜூலையில் இருந்தே வரத்துவங்கி விட்டன.

குறிச்சி குளத்துக்கு ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வரத்துவங்கியுள்ளன. கருஞ்சிறகு கொக்குகள், கரண்டி அலகு பறவைகள், பசுபிக் பொன் பிளவர், திபெத்திய பிளவர், கென்டிஷ் பிளவர், கருவால் கோட்விட், டெம்மின்க்ஸ் ஸடிண்ட், மீசை ஆலா போன்ற நீர்ப்பறவைகள் இங்கு வருகின்றன. இதில், அரிய வகை காலர்டு பிராட்டிங்கோல் (Collared Pratincole) எனும் கருவளைய தோல்குருவி அடையாளம் காணப்பட்டது.

இப்பறவையை பேர்டு வாட்சர் பிரகாஷ் மற்றும் புகைப்பட கலைஞர்கள் பார்வதி, ராம்கி ஆகியோர் கொண்ட குழு அடையாளம் கண்டு உறுதி செய்துள்ளது.

பிரகாஷ் கூறுகையில், ‘‘13 ஆண்டுகளாக, 300க்கும் மேற்பட்ட அரிய வகை பறவைகளை ஆவணப்படுத்தியுள்ளேன். இந்த காலர்டு பிராட்டிங்கோல் பறவை, 10 ஆண்டுகளாக கோவைக்கு வந்ததாக ஆதாரங்கள் இல்லை. மத்திய ஆசியா மற்றும் கஜகஸ்தான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியாவில் குஜராத் போன்ற தென்மேற்கு ஆசிய பகுதிகளில் இப்பறவை உள்ளது.

குளிர்காலத்தில் வலசைக்கு செல்கிறது. தமிழகத்தில் மதுரை, சென்னைக்கும், தற்போது கோவைக்கும் வந்துள்ளது. இது குளக்கரை பகுதிகளில் உள்ள புழு, பூச்சி, நத்தை போன்றவற்றை விரும்பி சாப்பிடும்.

இது, நன்னீர் பறவை. காற்றில் வேகமாக பறந்து கொண்டே வண்டு, வெட்டுக்கிளி போன்ற பூச்சிகளை வேட்டையாடும் திறன் கொண்டது,’’ என்றார்.

Advertisement