சூலூர் போலீஸ் ஸ்டேஷனில் இளைஞர் மீது தாக்குதல்தடுத்த இரு போலீசார் காயம்

சூலூர்: சூலூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு, விசாரணைக்கு வந்த இளைஞர் மீது தாக்குதல் நடந்தது. தடுக்க முயன்ற இரு போலீசார் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கோவை மலுமிச்சம் பட்டியை சேர்ந்தவர் பிரசாத், 29. தனியார் நிறுவன ஊழியர். இவர், செலக்கரச்சல் பகுதியை சேர்ந்த சண்முக பிரியா என்பவரை காதலித்து சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஒரு மாதமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், தனது புகைப்படங்களை, சமுக வலைத்தளங்களில் ஆபாசமாக பகிர்ந்ததாக, ராம் பிரசாத் மீது, சூலூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் சண்முக பிரியா புகார் அளித்தார்.

இதைத்தொடர்ந்து, ராம் பிரசாத் மற்றும் குடும்பத்தினர் விசாரணைக்காக சூலூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்று மாலை வந்தனர்.

அப்போது, சண்முக பிரியா குடும்பத்தினர் ராம் பிரசாத் மீது தாக்குதல் நடத்தினர். சத்தம் கேட்டு, ஏட்டு பாலமுருகன் மற்றும் பெண் போலீஸ் பிரியா ஆகியோர் ராம் பிரசாத்தை மீட்க முயன்றனர். அப்போது, அந்த கும்பல் போலீசாரை தாக்கி தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இளைஞரை போலீசார் மீட்டு, ஸ்டேஷனுக்குள் கொண்டு சென்றனர். காயமடைந்த இரு போலீசாரும், சூலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தாக்குதல் சம்பவம் நடந்த போது, சண்முக பிரியாவும் மயங்கி விழுந்ததால், அவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து, சூலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement