தண்டவாளத்தை கடந்த யானைகள்: ரயிலை நிறுத்தி காப்பாற்றிய ஊழியர்களுக்கு குவியும் பாராட்டு

கோல்கட்டா:

இந்தியாவில் பல மாநிலங்களில் வனப்பகுதிகளில் தண்டவாளத்தை கடக்கும் போது யானைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழக்கும் நிகழ்வு அடிக்கடி நடக்கின்றன. இதனை தடுக்க மத்திய , மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுக்கின்றன. ஆபத்தான பகுதிகளில் ஏஐ உதவியுடனும், வன பாதுகாவலர்கள் உதவியுடனும் யானைகள் உயிரிழப்பு தவிர்க்கப்படுகின்றன.

இந்நிலையில், அதேபோன்று மேற்கு வங்கத்தில் ஒரு நிகழ்வு அரங்கேறி உள்ளது.

மேற்கு வங்கத்தில் பக்தோக்ரா- நக்சல்பாரி வழித்தடத்தில் சிக்கிம் மஹானந்தா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. வனப்பகுதியான இப்பகுதியில் தண்டவாளத்தை யானைகள் கூட்டம் வரிசையாக கடப்பதற்காக வந்தன. இதனை கவனித்த அங்கிருந்த வன ஊழியர் ஒருவர், சிவப்பு துணியை காட்டி ரயில் ஓட்டுநர் எச்சரித்தார். அவரும் உடனடியாக ரயிலை நிறுத்தினார். இதனால் யானைகள் உயிரிழப்பது தவிர்க்கப்பட்டது.

இது குறித்த வீடியோவை ஐஎப்எஸ் அதிகாரி ஒருவர் சமூக ஊடகங்களில் வெளியிட, வைரலானது. இதனை பார்த்த நெட்டிசன்கள், ரயில் ஓட்டுநரையும், வன பாதுகாப்பு அதிகாரியையும் பாராட்டுகின்றனர்.

Advertisement