5 மாநிலங்களில் குழந்தை திருமணங்கள் அதிகரிப்பு!:  ஐ.நா., அமைப்பின் ஆய்வில் அதிர்ச்சி

புதுடில்லி :

நம் நாட்டில், திருமணத்துக்கான குறைந்தபட்ச வயது பெண்ணுக்கு 18 ஆகவும், ஆணுக்கு 21 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் குழந்தை திருமணம் பெருமளவு தடுக்கப்பட்டாலும், கிராமப்புறங்களில் ஆங்காங்கே தொடர்ந்த வண்ணம் உள்ளன. குழந்தை திருமணத்தை ஒழிக்கும் நோக்கில், 2024ல், மத்திய அரசு 'குழந்தை திருமணமில்லா இந்தியா' இயக்கத்தைத் தொடங்கியது. வரும் 2030க்குள் குழந்தை திருமணத்தை முற்றிலும் ஒழிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த சூழலில், ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் எனப்படும் 'யுனிசெப்' அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், நம் நாட்டில் குழந்தை திருமணம் குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ள தாவது: இந்தியாவில், 17 வயது பூர்த்தியடைவதற்கு முன்பே திருமணம் செய்து கொண்ட சிறுமியரின் எண்ணிக்கை, 22 கோடிக்கும் அதிகமாக உள்ளது. இவர்களில், 9 கோடிக்கும் அதிகமானோர், 15 வயதை அடைவதற்கு முன்பே கட்டாய திருமணத்தில் தள்ளப்படுகின்றனர். உலகளவில் குழந்தை திருமணத்தால் பாதிக்கப்படும் சிறுமியரில் மூன்றில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவராக இருக்கிறார்.

இந்தியாவில் நடக்கும் மொத்த குழந்தை திருமணங்களில் பாதிக்கும் மேற்பட்டவை உத்தர பிரதேசம், பீஹார், மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில் மட்டும் அரங்கேறுகின்றன. கேரளா, லட்சத்தீவு ஆகிய மாநிலங்களில் குழந்தை திருமணங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் சிறப்பாக உள்ளன.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அதிகரித்து வரும் குழந்தை திருமணத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

யுனிசெப் அமைப்பின் இந்தியப் பிரதிநிதி சிந்தியா மெக்காப்ரி கூறுகையில், ''பெண் குழந்தைகள் ஆரோக்கியத்துடன், பாதுகாப்பாக வாழ அவர்களுக்கு திறன்களை வளர்ப்பதற்கான வாய்ப்புகள் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும். நம் நாட்டில் குழந்தை திருமணத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு சிறப்பான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதனை மேலும் வலுப்படுத்த வேண்டும்,'' என்றார்.

குழந்தைகள் உரிமைக்கான, 'கிரை' அமைப்பின் தலைமை செயல் அதிகாரி பூஜா மர்வாஹா கூறுகையில், ''குழந்தை திருமணத்தை தடுக்க தீவிர நடவடிக்கைகள் அவசியம். இந்த விவகாரத்தில் தேசிய சரசாரி அளவை பார்த்து மட்டும் திருப்தியடையாமல், மாநில அளவில் கட்டுப்பாடுகளை முடுக்கிவிட வேண்டும்,'' என்றார்.

'குழந்தை திருமணத்தை தடுப்பதற்கான சட்டப் பாதுகாப்பு, ஒவ்வொரு குழந்தையையும் சென்றடைய வேண்டும். அதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்வதுதான் முக்கியம். 'குழந்தைத் திருமணம் ஒரு சிறுமியின் கல்வி, வேலைவாய்ப்பு, உடல்நலத்தை பாதிப்பதுடன், அவரின் வாழ்வுரிமையையும் பறிக்கிறது' என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement