உயிரிழந்த தெரு நாய்க்கு போஸ்டர் ஒட்டி அஞ்சலி

ராசிபுரம்,:ராசிபுரம் வி.நகர் பகுதியில் நாட்டு ரகத்தை சேர்ந்த நாய் ஒன்று சுற்றி வந்தது. அந்த நாய் பிறந்ததில் இருந்தே அப்பகுதியிலேயே வசித்து வந்தது. இதற்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், 'டாமி' என, பெயரிட்டு அழைத்து வந்தனர்.

வி.நகர் பகுதியில் உள்ள எந்த வீட்டின் முன் நின்றாலும், அந்தந்த வீடுகளில் உள்ளவர்கள் தவறாமல் அதற்கு உணவு வழங்கி வந்தனர். இதனால் அந்த பகுதி மக்கள் அனைவருக்கும் செல்லப்பிராணியாக டாமி வளர்ந்து வந்ததுடன், அப்பகுதி மக்களிடம் மிகுந்த பாசத்துடனும் பழகி வந்தது.

இந்நிலையில், டாமி கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த, ௯ல் டாமி இறந்தது. இதனால், வி.நகர் பகுதி மக்கள் சோகமடைந்தனர்.

இதை தொடர்ந்து, டாமியின் உடலுக்கு மாலை அணிவித்து, இறுதிச்சடங்கு செய்தனர். பின், அப்பகுதியில் உள்ள மயானத்திற்கு உடலை எடுத்துச்சென்று அடக்கம் செய்தனர்.மேலும், அப்பகுதி மக்கள் டாமிக்கு கண்ணீர் அஞ்சலி பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர். அதில், 'எங்கள் வி.நகரின் செல்லப்பிள்ளை, பேசத்தெரியாத அன்பின் மிகச்சிறந்த வடிவம், நன்றியின் நம்பிக்கையே, விசுவாசத்தின் விஸ்வரூபமே, வி மிஸ் யூ' என்ற வாசகங்களை அச்சிட்டு, டாமியின் படத்தையும் பதிவிட்டுள்ளனர். தெரு நாய்க்கு பொதுமக்கள் பாசத்துடன் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement