'குடி' போதையில் அடுத்தடுத்து கொலை மதுபான கடைகளை இடமாற்ற கோரிக்கை

எருமப்பட்டி:எருமப்பட்டி டவுன் பஞ்.,ல் உள்ள டாஸ்மாக் கடைகளால், கொலை சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்து வருவதால், மதுபான கடைகளை இடமாற்ற வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எருமப்பட்டி டவுன் பஞ்.,ல், 5,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதில், முக்கிய குடியிருப்புகள் நிறைந்த பகுதியான முட்டாஞ்செட்டி ரோடு, துறையூர் ரோடு ஆகிய, இரண்டு இடங்களில் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த டாஸ்மாக் கடைகளில் இருந்து தினமும், 'குடி'மகன்கள் மது போதையில், மாலை நேரத்தில் பள்ளி முடிந்து செல்லும் மாணவியர்களையும், பெண்களையும் கிண்டல் செய்து வருகின்றனர்.
இதனால், இந்த டாஸ்மாக் கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என, டவுன் பஞ்., பகுதியில் குடியிருப்போர் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். ஆனால், கடைகளை வேறு இடத்திற்கு மாற்றினால் வருவாய் கெட்டுவிடும் என்பதால், அதே இடத்தில் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், முட்டாஞ்செட்டி சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி சென்ற நண்பர்கள் மது குடித்தபோது, போதை தலைக்கேறியதில் தகராறு ஏற்பட்டு, கடந்த மாதம், 22ல் சிவா என்ற வாலிபர் கொலை செய்யப்பட்டார். அதே டாஸ்மாக் கடையில் மது குடித்தபோது, கடந்த, 25ல் பெயின்டர் ராமசாமி என்பவரை, மது வாங்கி தராத கோபத்தில் கல்லால் தாக்கி கொலை செய்தனர். இதுபோல், எருமப்பட்டி யில் உள்ள டாஸ்மாக் கடைகளால் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனால், டாஸ்மாக் கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement