சில்லறை விற்பனை டீசல் பங்க் கோரி பழையாரில் 2 வது நாளாக போராட்டம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பழையார் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 350 விசைப்படகுகள், 600 பைபர் படகுகளுக்கு டீசல் வழங்குவதற்காக தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் சார்பில் டீசல் பங்க் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பங்கில் வழங்கப்படும் டீசல் சில்லறை விற்பனை நிலையங்களை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் 40 கி.மீ. தொலைவில் உள்ள வானகிரிக்கு சென்று டீசல் வாங்கி வந்தனர்.

கூடுதல் செலவு ஏற்படுவதால் பழையார் கிராமத்திலேயே மீன்வளத் துறை மூலம் மானிய விலையில் டீசல் பங்க் அமைத்து தர வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். கோரிக்கை நிறைவேற்றப்படாததால் நேற்று முன் தினம் பழையார் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை நடத்த வந்த மீன்வளத்துறை அதிகாரிகளை சிறை பிடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கோரிக்கைக்கு தீர்வு காணப்படாததால் நேற்று 2 வது நாளாக மீனவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களை நேற்று மாலை சந்தித்த சீர்காழி எம்எல்ஏ. செந்தில் செல்வன் விபரங்களை கேட்டறிந்தார். தொடர்ந்து மீன்வளத்துறை அமைச்சரை சந்தித்து குறைகளை தெரிவித்து தீர்வு காணப்படும். அமைச்சரை சந்திக்க மீனவ பஞ்சாயத்தார்கள் சென்னைக்கு செல்வோம் என்று எம்எல்ஏ. அழைப்பு விடுத்தார். அதனை ஏற்று மீனவ பஞ்சாபித்தார்கள் எம்எல்ஏ தலைமையில் இன்று 14ஆம் தேதி சென்னை செல்கின்றனர். அதில் உடன்பாடு ஏற்படவில்லை என்றால் போராட்டத்தை தொடருவோம் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement