விவசாயிகளின் விவரங்களை துல்லியமாக பதிவு செய்ய கலெக்டர் அறிவுரை

விழுப்புரம்: விழுப்புரத்தில் வேளாண்மை துறை மாதாந்திர ஆய்வுக்கூட்டம், கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், கலெக்டர் ஆலோசனை வழங்கி, விவசாயிகள் குறைதீர் கூட்டங்களில் பெறப்படும் மனுக்களை உரிய முறையில் பரிசீலித்து, தகுதியான கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து, மனுதாரர்களுக்கு தீர்வுக்கான விவரங்களை தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும், வேளாண் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பயிர் சாகுபடி பரப்புத்திட்டம், டிஜிட்டல் பயிர் சாகுபடி கணக்கெடுப்புத் திட்டம், நுண்ணீர் பாசன திட்டம், தேசிய சமையல் எண்ணெய் திட்டம், பயறுவகை அபிவிருத்தி திட்டம், பாரம்பரிய விதை நெல் விநியோக திட்டம், பயிர் காப்பீடு திட்டம், பயறுவகை பயிர்களில் தன்னிறைவு திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்தும் அனைத்து இடுபொருட்கள் இருப்பு குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

பி.எம். கிசான் திட்டத்தில் விடுபட்ட விவசாயிகள் விவரங்களை சரிபார்க்கும் பணிகளை துறை சார்ந்த அலுவலர்கள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

தொடர்ந்து, மாவட்டத்தில் விவசாயிகள் பதிவு பணிகளை துரிதப்படுத்தவதோடு, தகுதியுள்ள விவசாயிகளின் விவரங்களை துல்லியமாகப் பதிவு செய்ய வேண்டும்.

டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு மற்றும் பதிவு தளத்தில் மேற்கொள்ளப்படும் பதிவுப் பணிகளை உரிய காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும்.

பயிர் சாகுபடி விவரங்கள் சரியாகப் பதிவு செய்யப்படுவதை துறை சார்ந்த அலுவலர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

மின்னணு வர்த்தக தளத்தின் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்த வேண்டும்.

வேளாண் பொறியியல் துறை சார்பில், செயல்படுத்தப்பட்டு வரும் இ–வாடகை உழுவை இயந்திரங்கள் வாடகை திட்டம் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

விவசாயிகள் ஒன்றிணைந்து இடுபொருட்களை பெறுவதற்கும் விளைபொருட்களை சந்தைப்படுத்துவதற்கும் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை உருவாக்குவதற்கும் போன்ற செயல்பாடுகளுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

கூட்டத்தில் வேளாண் இணை இயக்குநர் சுரேஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சரவணன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் வெங்கட்ராமன், வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர் சுமதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement