சாம்பல் பூசணிக்கு போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் கவலை

அரூர்: திருவிழாக்கள், சுபமுகூர்த்த நாட்கள் மற்றும் ஆயுதபூஜை போன்ற விசேஷ காலங்களில் சாம்பல்பூசணியின் தேவை அதிகமாக இருக்கும்.

இதை கருத்தில் கொண்டு, தர்மபுரி மாவட்டம், அரூர், மொரப்பூர் மற்றும் கம்பைநல்லுார் சுற்றுவட்டார பகுதிகளில், 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் சாம்பல் பூசணி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, சாம்பல் பூசணிக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.இது குறித்து, விவசாயி
கள் கூறியதாவது:
கடந்த காலங்களில், ஆயுத பூஜை பண்டிகையின் போது, சாம்பல் பூசணிக்கு நல்ல விலை கிடைத்ததால் அரூர், மொரப்பூர் மற்றும் கம்பைநல்லுார் சுற்றுவட்டார பகுதிகளில், ஆர்வத்துடன் விவசாயிகள் சாம்பல் பூசணி சாகுபடி செய்துள்ளனர். தற்போது, அறுவடை செய்யும் பணி நடக்கிறது. சாம்பல் பூசணி சாகுபடிக்கு, ஏக்கருக்கு, 40,000 முதல், 50,000 ரூபாய் வரை செலவாகிறது. சாகுபடி காலம், 90 நாட்களாகும். ஒரு ஏக்கருக்கு, சராசரியாக, 15 டன் மகசூல் கிடைக்கிறது. அதிக வெயில் மற்றும் போதிய மழை பெய்யாததால், சாம்பல் பூசணி அளவு சிறிதாக உள்ளதுடன், மகசூலும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது, ஒரு கிலோ, 7 முதல், 8 ரூபாய் வரை மட்டுமே விவசாயிகளிடமிருந்து இடைத்தரகர்கள் கொள்முதல் செய்கின்றனர். ஆனால், சந்தையில், கிலோ, 30 ரூபாய்க்கு வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர். சாம்பல் பூசணிக்கு போதிய விலை கிடைக்காததால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement